2016-09-23 15:54:00

ஒருங்கிணைந்த திருப்பீட ஊடகத்துறையின் விதிமுறைகள்


செப்.23,2016. டிஜிட்டல் ஊடகத் தாக்கத்தையும், சமுதாய ஊடகச் செயல்பாட்டையும் மனதில் கொண்டு, வத்திக்கானில் துவங்கவிருக்கும், ஒருங்கிணைந்த திருப்பீட ஊடகத்துறையின் விதிமுறைகள், இவ்வியாழனன்று மாலை, திருத்தந்தையால் வெளியிடப்பட்டன.

'ஒரு பரிசோதனை ஓட்டமாக' வெளியிடப்பட்டுள்ள இந்த விதிமுறைகள் அடுத்த மூன்று ஆண்டுகள் பின்பற்றப்படும் என்றும், திருப்பீடத்தின் பல்வேறு துறைகளில் துவக்கப்பட்டிருக்கும் மாற்றங்களின் ஓர் அங்கமாக, ஊடகத்துறை மாற்றங்களும் இடம்பெறுகின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய ஊடகங்களில் ஏற்பட்டுள்ள விரைவான மாற்றங்களை மனதில் கொண்டு, 2015ம் ஆண்டு, ஜூன் 27ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் சுயவிருப்பத்தின் அடிப்படையில் வெளியிட்ட 'Motu Proprio' மடலின் வழியே இந்த மாற்றங்களைத் துவக்கி வைத்து, திருப்பீடத்தின் ஒருங்கிணைந்த ஊடகத்துறையை உருவாக்கினார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, இத்துறையின் தலைவர், செயலர் மற்றும் அதிகாரிகள் அனைவரும் ஐந்தாண்டுகள் என்ற கால வரையறையுடன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒருங்கிணைந்த இத்துறையில், பொதுப்பணிகள், ஆசிரியர் குழு, செய்தித் தொடர்பு, தொழில்நுட்பத் துறை, மற்றும் இறையியல், மேய்ப்புப்பணித் துறை என்ற ஐந்து பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இப்புதியத் துறையின் அதிகாரப்பூர்வ மொழி, இத்தாலிய மொழி என்பதும் இவ்விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.