2016-09-23 15:45:00

இந்தியாவில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன


செப்.23,2016. அண்மைய ஆண்டுகளில், இந்தியாவில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதைக் கண்டித்து, புது டில்லியில் 7000த்திற்கும் அதிகமானோர், போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

"Bharatiya Khet Mazdoor Union Federation" (BKMUF) என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போராட்டத்தில் இந்தியாவில் இயங்கிவரும் பல்வேறு தலித் அமைப்புக்கள் இணைந்தன என்று, பீதேஸ் (Fides) செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் மத்திய அரசு உருவானதிலிருந்து தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நிகழ்ந்துள்ளன என்றும், இந்த உண்மையை உணர்த்த, நாடெங்கும் போராட்டங்கள் நடைபெறவேண்டும் என்றும், டில்லி போராட்டத்தில் கலந்துகொண்ட இயேசு சபை அருள் பணியாளர், ஜான் போஸ்கோ அவர்கள், பீதேஸ் செய்திக்களித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தலித் மக்களுக்கு இந்திய அரசு செய்து வரும் உதவிகளைவிட, கத்தோலிக்கத் திருஅவை, தலித், மற்றும் பழங்குடியினருக்கு செய்து வரும் பணிகள் அதிகம் என்று, இந்திய ஆயர் பேரவையின் செயலர், ஆயர் தியடோர் மஸ்கரீனஸ் அவர்கள் பீதேஸ் செய்தியிடம் கூறினார்.

தலித் மக்களுக்கு எதிராக அண்மைய ஆண்டுகளில் வன்முறைகள் அதிகரித்துள்ளன என்று, இந்திய குற்றவியல் துறை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதையடுத்து, புது டில்லியில் இந்த போராட்டம் நிகழ்ந்ததென்று கூறப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு வெளியான ஓர் அறிக்கையின்படி, குஜராத் மாநிலத்தில் 6,655 வன்முறை நிகழ்வுகளும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 3,008 மற்றும், ராஜஸ்தான் மாநிலத்தில் 7,144 வன்முறை நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.