2016-09-23 15:53:00

அனைத்துப் புதுமைகளிலும் இறைவனின் கரம் வெளிப்படுகிறது


செப்.23,2016. புனிதர்பட்ட படிநிலைகள் பேராயத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ அவர்களும், செயலர், பேராயர் மார்சேல்லோ பார்த்தோலுச்சி அவர்களும் இணைந்து இவ்வியாழன்று வெளியிட்டுள்ள விதிமுறை மாற்றங்கள் குறித்து, பேராயர் பார்த்தோலுச்சி அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவில் கட்டுரையொன்று வெளியிட்டுள்ளார்.

உலகில் நிகழும் அனைத்துப் புதுமைகளிலும் இறைவனின் கரம் வெளிப்படுகிறது என்றும், ஒவ்வொரு புதுமையும் இறையரசை அறிவிக்கும் அடையாளம் என்று இயேசு கூறியதையும், பேராயர் பார்த்தோலுச்சி அவர்கள், தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

12ம் நூற்றாண்டு வரை புதுமைகள் மிக எளிதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சூழல் மாறி, 13ம் நூற்றாண்டு முதல், கத்தோலிக்கத் திருஅவையில் புதுமைகளை ஏற்றுக்கொள்ள தகுந்த வழிமுறைகள் நிறுவப்பட்டன என்ற வரலாற்றை விளக்கிக் கூறும் பேராயர் பார்த்தோலுச்சி அவர்களின் கட்டுரை, இந்த விதிமுறைகளில் இறுதியாக திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள் வெளியிட்ட Divinus perfectionis Magister என்ற விதிமுறையே தற்போது முடிய நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள விதிமுறை மாற்றங்கள், 2015ம் ஆண்டு செப்டம்பர் முதல் மேற்கொள்ளப்பட்ட ஓராண்டு விவாதங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன என்று, பேராயர் பார்த்தோலுச்சி அவர்கள், தன் கட்டுரையில் கூறியுள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.