2016-09-22 15:53:00

வீண்பெருமை ஆன்மாவை உடைக்கும் நோய் – திருத்தந்தையின் மறையுரை


செப்.22,2016. எலும்புகள், சக்தியிழந்து, உடையும் நிலையை அடையச் செய்யும் osteoporosis என்ற நோய், உடலில் ஏற்படுவதுபோல்,  ஆன்மாவின் osteoporosis நோய், வீண்பெருமையால் உண்டாகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை வழங்கிய மறையுரையில் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில், "வீண், முற்றிலும் வீண்" என்று சபையுரையாளர் கூறும் வார்த்தைகளை மையப்படுத்தி, மறையுரைக் கருத்துக்களை வழங்கினார் திருத்தந்தை.

இயேசுவைக் குறித்து கேள்விப்படும் குறுநில மன்னன் ஏரோது, திருமுழுக்கு யோவானை, தான் கொலை செய்ததை மறக்கமுடியாமல், உள்ளத்தில் போராட்டங்களைச் சந்திக்கிறார் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, ஏரோதின் தந்தையும், குழந்தை இயேசுவைக் கொல்ல முயன்ற குற்றத்தை மனதில் சுமந்து போராடியவர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

குற்றங்களைப் புரிவோர் ஒருபோதும் மன நிம்மதியுடன் வாழ முடியாது என்று தன் மறையுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை, குற்றங்கள் புரிவதற்கு, பேராசை, வீண் பெருமை, அகந்தை ஆகியவை அடித்தளங்களாக உள்ளன என்று கூறினார்.

இன்றைய முதல் வாசகத்தில் கூறப்பட்டுள்ள வீண் பெருமை பற்றி பேசியத் திருத்தந்தை, osteoporosis நோயினால் பாதிக்கப்பட்ட எலும்புகள், வெளிப்புறத்தில் அழகாகத் தெரிந்தாலும், அது உள்ளூற நோயுற்று இருப்பதுபோல், வீண் பெருமை கொள்ளும் ஆன்மா, வெளிப்புறத்தில் அழகாக இருந்தாலும், உள்ளுக்குள் நோயுற்று துன்புறுகிறது என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.