2016-09-22 16:01:00

திருத்தந்தை - வரலாற்றை முதலில் எழுதுவது, பத்திரிக்கையாளர்களே


செப்.22,2016. மனித சமுதாயத்தில் தாக்கங்களை உருவாக்கும் ஒரு சில துறைகளில், பத்திரிகை துறையும் ஒன்று என்றும், அத்துறையில் பணியாற்றுவோருக்கு கூடுதல் பொறுப்புக்கள் உள்ளன என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இத்தாலிய தேசிய பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் 400 பேரை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, மனித வரலாற்றின் நிகழ்வுகளை, பத்திரிக்கையாளர்களே முதலில் எழுதுகின்றனர் என்று சுட்டிக்காட்டினார்.

ஆன்மீகத்தில் ஆழமான உண்மைகளை உணர, தியானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துரிதமாக செயல்படும் பத்திரிகை துறையில் தியானங்கள் சாத்தியமில்லை என்றாலும், அத்துறையில் பணியாற்றுவோர் நின்று, நிதானித்து தகவல்களை வெளியிடுவது அவசியம் என்று கூறினார்.

உண்மையை நேசிப்பது, செய்யும் தொழிலை, சட்டங்களையும் தாண்டி, வாழ்வாக்குவது, மனித மாண்பைக் காப்பது என்ற மூன்று கருத்துக்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த பத்திரிகை துறை பிரதிநிதிகளோடு பகிர்ந்துகொண்டார்.

பொய்மையை ஒரு தொழிலாக மாற்றிவரும் பல சமுதாய அமைப்புக்களுக்கு மத்தியில், உண்மையை நேசிப்பதும், அதனை தங்கள் தொழிலில் அச்சமின்றி எடுத்துரைப்பதும் பத்திரிக்கையாளர்களுக்கு உள்ள அடிப்படை சவால் என்று திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.

பத்திரிகை துறையினரின் கருத்துக்கள் மக்களை சென்றடைவது எளிதென்பதால், அத்துறையில் பணியாற்றுவோர் உண்மையான மனித மாண்பை பாதுக்காக்கும் வகையில் தங்கள் பணியை ஆற்றவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

பொதுவாக, பத்திரிக்கை துறையினர், சமுதாயத்தை பிளவுபடுத்தி, அழிப்பதற்குப் பதில், மக்களை கட்டியெழுப்பும் வண்ணம் பணியாற்றினால், இவ்வுலகில் சந்திப்புக்கள் பெருகும், தர்மம் தழைக்கும் என்று திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.