2016-09-22 16:16:00

கொலம்பியா அமைதி ஒப்பந்தம் நிகழ்வில், கர்தினால் பரோலின்


செப்.22,2016. தென் அமெரிக்காவின் கொலம்பியா நாட்டில், அரசுக்கும், புரட்சிக்குழுவான FARCக்கும் இடையே செப்டம்பர் 26, வருகிற திங்களன்று, அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் நிகழ்வில், திருப்பீடத்தின் சார்பில், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஆகஸ்ட் 24ம் தேதி அரசுக்கும், புரட்சிக்குழுவுக்கும் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம், 52 ஆண்டுகளாக அந்நாட்டில் நிலவி வரும் போராட்டங்களை முடிவுக்குக் கொணர்ந்துள்ளன என்று, ஊடகங்கள் கூறிவருகின்றன.

செப்டம்பர் 26ம் தேதி, Cartagena நகரில் நடைபெறும் இந்த அமைதி ஒப்பந்த கையெழுத்திடல் நிகழ்வில், பிற நாடுகளின் அரசுத் தலைவர்கள் 13 பேர், ஐ.நா.வின் உயர் அதிகாரிகள், மற்றும் உலக வங்கியின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொள்வர் என்றும், பின்னர் இந்த ஒப்பந்தம் மக்களின் வாக்கெடுப்பிற்கு அக்டோபர் 2ம் தேதி செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் இந்த ஒப்பந்தம் உருவான உடனேயே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விரு தரப்பினரையும், கொலம்பிய மக்களையும் வாழ்த்தி, செய்தியொன்றை அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1964ம் ஆண்டு முதல், அரசுக்கும், FARC குழுவுக்கும் இடையே நிகழ்ந்துவந்த உள்நாட்டுப் போரினால், இதுவரை, 2,60,000த்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்று, CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது. 

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.