2016-09-22 09:51:00

குற்றங்களைத் தடுப்பதில் மதத்தலைவர்களின் கடமைகள்


செப்.21,2016. இன ஒழிப்பு, போர்க்குற்றங்கள், இனத்தைச் சுத்தம் செய்தல், சமுதாயத்திற்கெதிரான குற்றங்கள் என்று, இன்றைய உலகம் சந்திக்கும் பிரச்சனைகள் அவசரமாகத் தீர்க்கப்படவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் வேண்டுகோள் விடுத்தார்.

நியூ யார்க் நகரில், ஐ.நா. தலைமையகத்தில் செப்டம்பர் 20, இச்செவ்வாயன்று உரை வழங்கிய திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், குற்றங்களைத் தடுப்பதில் மதத்தலைவர்கள் ஆற்றவேண்டியக் கடமைகள் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்தார்.

குற்றங்களைத் தடுப்பது, அரசுகள், மற்றும் அகில உலக அமைப்புக்கள் ஆகியவற்றின் கடமை என்றாலும், அண்மையக் காலங்களில், மதத்தின் பெயரால் குற்றங்கள் நிகழ்வதால், மதத்தலைவர்களின் பொறுப்பு கூடிவருகிறது என்று கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

தொடர்பு சாதனங்கள் வழியே, வலுவாக இணைக்கப்பட்டுள்ள இன்றைய உலகில், வெறுப்பை வளர்க்கும் கொள்கைகளும், செய்திகளும் விரைவாகப் பரவும் ஆபத்து பெருகிவருகிறது என்பதைக் குறித்து கவலையை வெளியிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், வெறுப்பை வளர்ப்பதில் ஒரு சில மதத் தலைவர்களுக்கும் பங்கு இருப்பது வேதனை தருகிறது என்று எடுத்துரைத்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.