2016-09-21 17:24:00

அடிப்படைவாதப் போக்கினைத் தடுக்க கல்வி அவசியம்


செப்.21,2016. அடிப்படைவாதப் போக்கையும், வன்முறையான வழிகளையும் தடுப்பதற்கு, சமுதாயத்தின் அனைத்து அமைப்புக்களும் ஒன்றிணைந்து உழைக்கவேண்டும் என்று, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஓர் உலக அரங்கில் உரையாற்றினார்.

நியூ யார்க்கில் அமைந்துள்ள ஐ.நா.அவையின் தலைமையகத்தில், செப்டம்பர் 19, 20 ஆகிய இருநாட்கள் நிகழ்ந்த பல்வேறு கூட்டங்களில் பங்கேற்ற கர்தினால் பரோலின் அவர்கள், அடிப்படைவாதப் போக்கினைத் தடுக்க கல்வி அவசியம் என்ற தலைப்பில் தன் உரையை வழங்கினார்.

இளையோர் நடுவே தவறான போக்குகளைத் தடுத்து நிறுத்த பணியாற்றிவரும் பல அமைப்புக்களில், மத நம்பிக்கை கொண்ட அமைப்புக்களுக்கு முக்கியமான பங்கு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், இவ்வமைப்புக்கள் சில வேளைகளில் இளையோருக்கு தவறான வழிகளைக் காட்டும் ஆபத்தும் உள்ளது என்று எடுத்துரைத்தார்.

மத நம்பிக்கையை வளர்க்கும் அமைப்புக்கள், நேரடியான போதனைகள் வழியாகவும், மறைமுகமான தங்கள் நடைமுறைகளாலும் இளையோருக்குத் தேவையான வாழ்க்கைப் பாடங்களை புகட்டும் பொறுப்பை பெற்றுள்ளன என்று கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

மத நம்பிக்கை கொண்ட அமைப்புக்கள், சமுதாய அமைப்பு, அதிகார அமைப்பு என்ற அனைத்து தரப்பினரோடும் இணைந்து இளையோரை உருவாக்குவதில் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயலாற்றவேண்டும் என்று,  திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள் விண்ணப்பித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.