2016-09-21 17:08:00

அசிசியில் போரினால் துன்புறும் அனைத்து நாடுகளுக்காக செபம்


செப்.21,2016. செப்டம்பர் 20, இச்செவ்வாயன்று, உலக அமைதி வேண்டி, அசிசி நகரில் இடம்பெற்ற செப நாளன்று, புனித பிரான்சிஸ் பசிலிக்கா வளாகத்தில் இடம்பெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டில், பல மதத் தலைவர்களின் சாட்சியங்களும், உரைகளும் இடம்பெற்றன.

சிரியாவின் அலெப்போ நகரிலிருந்து வந்திருந்த தாமார் மிகல்லி (Tamar Mikalli) என்பவர் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டபின், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்களுடன், யூத மத ரபி, டெண்டை புத்த மதப் பிரதிநிதி மற்றும், உலேமா குழுவைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் ஆகியோர் உரைகள் வழங்கினர்.

இதைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரை வழங்கியபின், உலகெங்கும் போரினாலும், வன்முறைகளாலும் துன்புறும் அனைவருக்காகவும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த செபவழிபாட்டில், போரினால் துன்புறும் அனைத்து நாடுகளும் பெயர் சொல்லி செபிக்கப்பட்டபின்னர், அந்த நாடுகளுக்காக மெழுகு திரிகள் ஏற்றப்பட்டன. ஆப்கானிஸ்தான், மியான்மார், புருண்டி, ஈராக், சிரியா, உக்ரைன், ஏமன் ஆகிய நாடுகள் உட்பட, 27 நாடுகளின் பெயர்கள் வாசிக்கப்பட்டு, சிறப்பான செபங்கள் எழுப்பப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.