2016-09-20 17:07:00

துன்புறும் மக்களின் அழுகுரல்களுக்கு நம் செவிகளைத் திறப்போம்


செப்.20,2016. போரினால் துன்புறும் மக்களின் அழுகுரல்களுக்கு நம் செவிகளை மூடாமல், மதப் பிரிவுகளைத் தாண்டி, அமைதியின் ஆண்டவரிடம் முழந்தாள்படியிட்டு இறைஞ்சுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

அசிசியில் நடைபெற்ற உலக அமைதி செப நாள் நிகழ்வுகளில் பங்கெடுக்கச் செல்லுமுன்னர், இச்செவ்வாய்க்கிழமை காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி, மறையுரையாற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர் ஆயுதங்களால் மக்கள் உயிரிழப்பது, காயமுறுவது ஆகியவைமட்டும் இடம்பெறுவது இல்லை, மாறாக, நோயுற்றோர், முதியோர் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்குத் தேவைப்படும் அவசரகால உதவிகளும் தடை செய்யப்பட்டுள்ளன என்ற கவலையை வெளியிட்டார்.

அசிசி நகரில் இன்று நடக்கப்போவது, ஓர் ஆடம்பர விழா அல்ல, மாறாக, அனைத்து சமயங்களும் ஒண்றிணைந்து அமைதிக்கென எழுப்பும் செபம் என்பதை வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை, 30 ஆண்டுகளுக்கு முன், புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களால் துவக்கப்பட்ட இந்த முயற்சியை, போரிடும் இவ்வுலகின் அமைதிக்கென தொடர்ந்து ஆற்றுவோம் என்று கூறினார்.

ஆயுத உற்பத்தியாளர்களின் கொடுமைகளால் துன்பங்களை அனுபவிக்கும் மக்களின் அழுகுரல்களுக்கு யாரும் தங்கள் காதுகளை மூடிக்கொள்ள முடியாது என்பதை திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

உயிர்களைப் பலிவாங்கும் வெடிகுண்டுகளால் இறந்தோரையும், காயமுற்றோரையும் குறித்து  மட்டும் எண்ணாமல், மனிதாபிமான உதவிகளைப் பெறவழியின்றி, உணவும், மருத்துவ உதவிகளும் இன்றி துன்புறும் மக்களைக் குறித்து சிந்திப்பதோடு, இத்தகைய துன்பநிலையை நமது சமுதாயம் உருவாக்கியுள்ளது குறித்து வெட்கப்படவும் வேண்டும் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.