2016-09-20 16:16:00

இது இரக்கத்தின் காலம் : மரணத் தொழிற்சாலையை நடத்துபவர்கள்


செப்டம்பர் 20, இச்செவ்வாயன்று, அமைதிக்காகச் செபிக்கும் அனைத்துலக நாள். செப்டம்பர் 21, உலக அமைதி நாள். “அமைதியின் கருவியாய் எனை மாற்றும்” என்ற அற்புத செபத்தை உருவாக்கிய புனித பிரான்சிஸ் பிறந்து, வளர்ந்த ஊரான அசிசி நகரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் பல்சமயத் தலைவர்களுடன், ஒரு செப வழிபாட்டை முன்னின்று நடத்தினார். இவ்வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு தருணங்களில் அமைதியைக் குறித்து பகிர்ந்துகொண்ட ஒரு சில கருத்துக்களை நினைவில் கொள்வோம்.

2013ம் ஆண்டு, செப்டம்பர் 1ம் தேதி - சிரியாவைப் பற்றி பேசியபோது திருத்தந்தை இவ்வாறு சொன்னார்: "அமைதி ஓர் அற்புதக் கொடை. அது காக்கப்படவேண்டும், வளர்க்கப்படவேண்டும். வன்முறை, அமைதியைக் கொணர்ந்ததாய் வரலாறு கிடையாது. போர் மற்றொரு போரை பெற்றெடுக்கிறது. வன்முறை, மேலும் வன்முறையைப் பெற்றெடுக்கிறது."

2014ம் ஆண்டு, சனவரியில் திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்திகளில் ஒன்று: "நாம் அமைதியைக் கொணர்வோம். அதை நம் குடும்பங்களில் துவக்குவோம்"

2015ம் ஆண்டு மேமாதம், 7000த்திற்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளைச் சந்தித்தபோது, உலகில் ஏன் அமைதி இல்லை என்று ஒரு குழந்தை கேட்டதற்கு, திருத்தந்தை சொன்ன பதிலின் ஒரு பகுதி: "சக்தி வாய்ந்த பலர், அமைதியை விரும்புவதில்லை; ஏனெனில் அவர்கள், போரை மூலதனமாக வைத்து வாழ்கின்றனர். ஆயுதங்களை உற்பத்தி செய்வோர், மரணத் தொழிற்சாலையை நடத்துகின்றனர்"

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.