2016-09-19 16:26:00

இது இரக்கத்தின் காலம் : அன்புதான் இன்ப ஊற்று


அன்று, பேரரசர் அசோகரின் படை வீரர்கள், கலிங்கப் போர் முடிந்த, வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். ஆனால், மணிமாறன் என்ற ஒரு வயதான படை வீரர் மட்டும், உடம்பில் புகுந்த ஒரு ஈட்டியுடன், குருதி கொட்டக் கொட்ட, குதிரையில் சென்று கொண்டிருந்தார். “அப்பா, ஆபத்துச் நேரத்திற்கு இது உதவும். எப்படிப்பட்ட காயத்தையும் நொடிப்பொழுதில் குணமாக்கிவிடும்” என, அவரது ஒரே மகள் மலர்விழி கொடுத்தனுப்பிய பச்சிலையையும் இடுப்புக் கச்சையில் அவர் முடிந்திருந்தார். தனது திருமணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கும் செல்ல மகள் கொடுத்தனுப்பிய அந்தப் பச்சிலையைக் கட்டுவதற்குக்கூட அவருக்குச் சக்தி இல்லை. ஓரிடத்தில் குதிரை, தாறுமாறாக ஓட, அதிலிருந்து பொத்தென்று கீழே விழுந்தார் அவர். விழுந்தவர், இரு கைகளையும் தரையில் ஊன்றிக்கொண்டு, நான்கடிதான் நகர்ந்திருப்பார். அங்கு காயம்பட்ட ஓர் இளம் படை வீரனைக் கண்டார். அவன் வயிற்றிலே ஆழமாக அம்பு ஒன்று தைத்திருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டார். அவ்விடத்தில் கிடந்த தண்ணீரை, ஒரு சில்லியில் எடுத்து, அந்தப் படை வீரன் வாயினருகில் சாய்த்து, அவன் மெதுவாக அருந்தும்படிச் செய்தார். தண்ணீரைச் சிறிது பருகியவுடன், அந்த இளைஞனுக்கு பாதி உயிர் வந்ததுபோல் தெரிந்தது. “அய்யா என்னைக் கொன்று விடாதீர்கள் என்று பயத்துடன் கேட்டான் அவன். அதற்கு மணிமாறன், நீ எதிரி நாட்டு படை வீரன் என்பது, உன் சீருடையிலுள்ள அடையாளத்தை வைத்து, முன்பே தெரிந்து கொண்டேன். உன்னை நான் எதற்காக கொல்லவேண்டும்? என்றார். பின்னர், தனது காயத்தைப் பற்றிக் கவலைப்படாமல், அந்தப் பச்சிலையை இளைஞனது காயத்தில் வைத்துக் கட்டினார். ராஜதிலகம் என்று, தன்னை அறிமுகம் செய்த அந்தப் படை வீரன்,  என்னை வாழ வைத்த தெய்வமே, உங்களுக்கு எப்படி நன்றி செலுத்தப் போகிறேன் என்று, இருகரம் கூப்பி வணங்கினான். பின்னர், அவர், ராஜதிலகா, என்னைக் கடும் வேதனைப்படுத்தும் இந்த ஈட்டியை உருவி, எனக்கு இந்த உலகத்தில் இருந்து விடுதலை கொடு, மறுத்து விடாதே என்றார். ராஜதிலகமும், மனதில்லாமல், தன் கண்களை இறுக மூடிக்கொண்டு, அந்த ஈட்டியை உருவினான். குருதி வெள்ளத்தில் மிதக்கும் அந்த வயதான படை வீரரைக் கண்டு, கண்ணீர் விட்டு கதறி அழுதான். அந்நேரத்தில், அன்புதான் இன்ப ஊற்று! என்ற குரல் கேட்டு, அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தான் ராஜதிலகம். அங்கு பேரரசர் அசோகர் நின்றுகொண்டிருந்தார். “பயப்படாதே! இங்கு நடந்தவை அனைத்தையும், உங்கள் இருவருக்கும் தெரியாமல் கவனித்துக் கொண்டேதான் வந்தேன். அன்பிற்கு இவ்வளவு சக்தி இருக்கும் என்று, கனவில்கூட நான் நினைக்கவில்லை” என்று மென்மையாகக் கூறிக்கொண்டே, தனது இடையில் சொருகியிருந்த வாளையும் கேடயத்தையும் தூக்கிக் கீழே எறிந்தார் பேரரசர் அசோகர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.