2016-09-17 16:38:00

திருத்தந்தை - சுயநலத்தைவிட்டு வெளியேறும் தூதர்கள்


செப்.17,2016. உலகின் பல திசைகளுக்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கு, முதலில் நம் சுயநலத்தைவிட்டு வெளியேறவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமை வழங்கிய மறையுரையில் கூறினார்.

பாப்பிறை பிரதிநிதிகளின் யூபிலியைக் கொண்டாட வத்திக்கான் வந்திருக்கும் திருப்பீடத் தூதர்களுடன் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, தாங்கள் பிறந்து, வளர்ந்த நாட்டைவிட்டு, வேற்று நாடுகளில் பணியாற்றிவரும் தூதர்களைப் பாராட்டினார்.

இச்சனிக்கிழமைக்கெனக் குறிக்கப்பட்டுள்ள 'விதை விதைப்பவர் உவமையை' மையப்படுத்தி தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூதர்களாகப் பணியாற்றுவோர், பல்வேறு நாடுகளுக்கு இறைவார்த்தை என்ற விதையைச் சுமந்து செல்வதை, தன் மறையுரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

தூதர்களின் பணியில், சிலுவையைச் சுமப்பது குறித்தும், சிலுவைக்கடியில் நிற்பது குறித்தும், திருப்பீடச் செயலர் பேசியதை, தன் மறையுரையில் நினைவுகூர்ந்தத் திருத்தந்தை, இப்பணியில் சுயநலத்தைத் துறப்பது, ஓர் அடிப்படைத் தேவை என்பதை வலியுறுத்திக் கூறினார்.

திருப்பலியில் கலந்துகொண்ட ஒய்வு பெற்ற தூதர்களுக்கு சிறப்பான நன்றியைத் தெரிவித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத் தூதர்கள் வழியே, இறைவன் விதைக்கும் அத்தனை விதைகளும் பலன் தராமல் போகாது என்பதை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் :  / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.