2016-09-17 17:06:00

சட்டவிரோத மரணதண்டனைகள் குறித்து ஆயர்கள் கவலை


செப்.,17,2016. பிலிப்பீன்ஸ் சமுதாயத்தில் தொடர்ந்து இடம்பெறும் வாழ்விற்கு எதிரான தாக்குதல்களால் பாதிக்கப்படும் மக்கள், இறைநீதி கேட்டு வானகத்தை நோக்கி அழுகின்றனர் என கூறியுள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.

கருக்கலைத்தல்கள், பயங்கரவாதச் செயல்கள், போதைப்பொருள் விற்பனையாளர்கள் சட்டத்திற்குப் புறம்பாக கொல்லப்படுதல் போன்றவை மனித மாண்பிற்கு ஊறுவிளைவிக்கும் பாவங்கள் என, தங்கள் அறிக்கையில் கவலையை வெளியிட்டுள்ள பிலிப்பீன்ஸ் ஆயர்கள், போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்கள், திருத்தப்படுவதற்குரிய நம் சகோதரர்களேயன்றி, சாவுக்குரியவர்கள் அல்ல என தெரிவித்துள்ளனர்.

வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட வியாகுல அன்னை திருவிழாவையொட்டி மேய்ப்புப்பணி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிலிப்பீன்ஸ் ஆயர்கள், கடந்த 10 வாரங்களில், ஏறத்தாழ 3500 பேர் அந்நாட்டில் கொல்லப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி,  எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும் அவரின் மாண்பு பாதுகாக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளனர்.

எந்த ஒரு குற்றவாளிக்கும் வாழ்வதற்கான ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமேயொழிய, சட்டவிரோதமாக அவரைக் கொல்வது பிரச்னைக்கான தீர்வாக இருக்கமுடியாது எனவும் தங்கள் சுற்றறிக்கையில் கூறியுள்ளனர் பிலிப்பீன்ஸ் ஆயர்கள்.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.