2016-09-17 16:17:00

இது இரக்கத்தின் காலம் – பீடமேற்றப்படும் பணம்


செல்வர்கள் ஒருசிலர், இவ்வுலகை எவ்விதம் ஆட்டிப்படைக்கின்றனர் என்பதை John Perkins என்பவர் ஒரு நூலில் எழுதியுள்ளார். 2004ம் ஆண்டு வெளியான இந்நூலின் தலைப்பு நம் கவனத்தை முதலில் ஈர்க்கிறது: Confessions of an Economic Hit Man - அதாவது, 'பொருளாதார அடியாள் ஒருவரின் பாவ அறிக்கை' என்பது இந்நூலின் தலைப்பு.

இந்நூலை அவர் எழுதியபிறகு, அளித்துள்ள பல பேட்டிகளில், அமெரிக்க செல்வர்களைப்பற்றி Perkins அவர்கள் சொல்வது இதுதான்... அமெரிக்காவை எந்தக் கட்சி ஆண்டாலும் சரி, ஆட்சியில் இருப்போரை ஆட்டிப் படைப்பதெல்லாம் செல்வம் படைத்த ஒரு சிலரே. இச்செல்வர்கள் தங்கள் நாட்டில் வளர்த்துள்ள வர்த்தகம் போதாதென்று, அடுத்த நாடுகளுக்குச் செல்ல முடிவெடுத்தால், அதற்கு அமெரிக்க அரசும் துணைபோக வேண்டும். உலகிலேயே மிக சக்திவாய்ந்ததெனக் கருதப்படும் அமெரிக்க அரசே, செல்வர்களின் கைபொம்மைகள் என்றால், ஏனைய நாடுகளைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?

செல்வம் மிகுந்த நாடுகளில் வாழும் செல்வர்கள், தங்கள் பணபலத்தைக் கொண்டு, இலத்தீன் அமெரிக்க, ஆப்ரிக்க, ஆசிய நாடுகளில் புகுந்து, அங்குள்ள அரசுகளை ஆட்டிப்படைப்பதை நாம் நன்கு அறிவோம். வெளிநாட்டிலிருந்து வந்துதான் ஒரு நாட்டின் மக்களாட்சியையோ அல்லது அந்நாட்டின் இயற்கை வளங்களையோ அழிக்கவேண்டும் என்பது கட்டாயமில்லை. நாட்டுக்குள் வாழும் செல்வர்களே இந்த அழிவை உருவாக்கி வருவதை ஒவ்வொரு நாட்டிலும் நாம் காணலாம். யார் ஆட்சியில் இருந்தாலும், செல்வர்கள் மட்டுமே ஆட்சி நடத்துகின்றனர் என்பதற்கு, அனைத்து நாடுகளும் எடுத்துக்காட்டுகள். இவ்விதம் செல்வர்கள் சக்தி பெறுவதற்கு, அவர்கள் உருவாக்கி, பீடமேற்றி, தொழுதுவரும் செல்வமே முக்கியக் காரணம். நாடுகளை ஆட்டிப்படைக்கும் செல்வர்களை, நாளெல்லாம் ஆட்டிப்படைப்பது அவர்கள் குவித்து வைத்திருக்கும் செல்வம்.

கடவுளையும், செல்வத்தையும் இணைத்து, இயேசு கூறும் திட்டவட்டமான சொற்கள், இரக்கத்தின் காலத்தில் நம்மை விழித்தெழச் செய்யட்டும்: "நீங்கள் கடவுளுக்கும், செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது" (லூக்கா 16: 13)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.