2016-09-16 16:33:00

முதியோர் சார்பில் பேசிய வத்திக்கான் உயர் அதிகாரி


செப்.16,2016. வயதின் அடிப்படையில் மனித சமுதாயம் சந்திக்கும் மாற்றங்களின் ஒரு முக்கிய அம்சமாக, வயதானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது நமது கடமை என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெனீவாவில் நிகழும் ஐ.நா. அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் Ivan Jurkovič அவர்கள், செப்டம்பர் 14, இப்புதனன்று நடைபெற்ற மனித உரிமை அவையின்  33வது அமர்வில், வயது முதிர்ந்தோர் சார்பில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

தற்போதைய உலகில், வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை வளர்ந்துவருவதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பேராயர் Jurkovič அவர்கள், இந்த நிலை தொடர்ந்தால், 2050ம் ஆண்டில், 15 வயதுக்கு உட்பட்டோரின் எண்ணிக்கையை விட, வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்பதை எடுத்துரைத்தார்.

தற்போது 90 கோடியாக இருக்கும் வயது முதிர்ந்தோர் எண்ணிக்கை, 2050ம் ஆண்டு 200 கோடியாக உயரும் என்ற புள்ளிவிவரத்தைச் சுட்டிக்காட்டிய பேராயர் Jurkovič அவர்கள், இந்நிலையில், வயது முதிர்ந்தோரின் நலவாழ்வு, பணியாற்றும் உரிமை, சமுதாயப் பாதுகாப்பு ஆகிய தேவைகளை நாம் நிறைவேற்றும் வழிகளை, தற்போதிருந்தே தேடவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

வறுமைப்பட்ட முதியோரின் நிலை ஒவ்வோர் ஆண்டும் மோசமாகிவருவதை தன் உரையில் குறிப்பிட்ட பேராயர் Jurkovič அவர்கள், முதியோரில் பாதிக்குப் பாதி பேர், ஓய்வூதியமோ, குடும்ப ஆதரவோ இல்லாமல் வாழ்வதையும் எடுத்துரைத்தார்.

திறமையுள்ளவராக, பயனுள்ளவராக இருப்பதை மட்டுமே  வலியுறுத்தும் இன்றைய உலகில், முதியோர், பயனற்றவர்கள் என்ற எண்ணம் வளர்ந்துவருவது ஆபத்தான ஒரு போக்கு என்று, திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் Jurkovič அவர்கள், கவலையை வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.