2016-09-16 16:03:00

திருத்தந்தை - 'நாளை மறுநாள்' என்பதே, கிறிஸ்தவ ஆன்மீகம்


செப்.16,2016. இன்றைய நாள் என்ற எண்ணத்தில் கிறிஸ்தவ ஆன்மீகம் மூடப்பட்டுவிடக்கூடாது; மாறாக, 'நாளை மறுநாள்' என்பதை எதிர்பார்த்து காத்திருப்பது நமது ஆன்மீகம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை நிறைவேற்றியத் திருப்பலியில் மறையுரையாற்றினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, திருத்தூதர் பவுல், கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தை மையப்படுத்தி தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இறந்த காலத்தில் நிகழ்ந்தவற்றை மீண்டும், மீண்டும் சிந்திக்க முயலும் நாம், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்கத் தயங்குகிறோம் என்று, தன் மறையுரையில் குறிப்பிட்டார், திருத்தந்தை.

'நாளை மறுநாள்' என்ற எண்ணம், இயேசுவின் உயிர்ப்புடன் தொடர்புகொண்டது என்பதை விளக்கிக்கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்த்தபின்னர் சீடர்களைச் சந்தித்த இயேசு, அவர்களிடம் தன்னைத் தொடுமாறு அழைத்ததைப் போலவே, நம்மையும் அந்த அனுபவம் பெற அழைக்கிறார் என்று கூறினார்.

இயேசுவைத் தொடுவது, நமக்குள் பெரும் மாற்றங்களை உருவாக்கும் என்ற அச்சத்தால், நாம் இந்த முயற்சியை மேற்கொள்ளத் தயங்குகிறோம் என்று கூறியத் திருத்தந்தை, உயிர்த்த இயேசுவைத் தொட்டு, எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர் கொண்டு, நமது வாழ்வை மாற்றியமைக்கும் வரத்தை வேண்டுவோம் என்று தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.