2016-09-15 14:12:00

இது இரக்கத்தின் காலம் – ஒன்றைப் பெற இன்னொன்றை இழக்கத்தான்..


ஒரு காட்டில் இரண்டு பெரிய பாறைகள் அருகருகே கிடந்தன.  பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் மழையில் ஊறி, வெயிலில் வாடிக்கிடந்த அந்தப் பாறைகளுக்கு மிகவும் சலிப்பாக இருந்தது. ‘நாம் எப்போதாவது இங்கிருந்து நகர்வோமா?’ என்று மிகவும் ஏக்கத்தோடு பேசிக்கொண்டன. அந்நேரம் பார்த்து, புதிய கோவில் ஒன்றுக்கு, சிற்பங்களைச் செதுக்குவதற்கு கற்களைத் தேடி, ஏழெட்டு சிற்பிகள் அந்தக் காட்டுக்குள் வந்தார்கள். அவர்களில் ஒரு சிற்பி, இந்தப் பாறைகளைக் கவனித்தார். மற்றவர்களிடம் அவற்றைக் காண்பித்து, ‘இந்த இரண்டு பாறைகளும் சரியான அளவில இருக்கின்ற மாதிரி தெரிகிறது. நாளைக்கே ஆள் வைத்துத் தூக்கிக்கொண்டு போய்விடலாம்! என்று சொன்னார்.’ சிற்பிகள் திரும்பிச் சென்ற பிறகு, நம்ம பல நாள் கனவு நிறைவேறப் போகுது! நாளைக்கு நாம நகரத்துக்குப் போறோம்! என்றது முதல் பாறை. உடனே இரண்டாவது பாறை கோபமாகச் சீறியது. அவங்க உனக்கு நகரத்தைச் சுத்திக்காட்டறதுக்கு இல்ல, உன்னை அடிச்சு உடைச்சு செதுக்கி, சிலையா மாத்துறத்துக்காக கூட்டிகிட்டுப் போறாங்க? என்றது. அதுக்கு என்ன பண்றது? ஒன்றைப் பெற இன்னொன்றை இழந்துதானே ஆகணும்? நான் வலியைப் பொறுத்துக்குவேன். பிரச்சனையில்லை! என்றது முதல் பாறை. ‘என்னால அது முடியாது. நாளைக்கு அவங்க வரும்போது நான் இன்னும் ஆழமாப் போய் உட்கார்ந்துக்குவேன். அவங்க எல்லாரும் சேர்ந்து எவ்ளோ கஷ்டப்பட்டாலும் என்னைத் தூக்கமுடியாது என்றது இரண்டாவது பாறை. மறுநாள் அந்தச் சிற்பிகள் மீண்டும் வந்தார்கள். முதல் பாறையைக் கட்டித் தூக்கி வண்டியில் வைத்தார்கள். இரண்டாவது பாறையை அவர்களால் அசைக்கக்கூட முடியவில்லை. ஒரு பாறை கிடைத்த திருப்தியில் அவர்கள் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள்.  இப்போது அந்த முதல் பாறை அற்புதமான கடவுள் சிலையாக எல்லாராலும் வணங்கப்படுகிறது. இரண்டாவது பாறை இன்னும் காட்டுக்குள்தான் கிடக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.