2016-09-14 16:28:00

மறைக்கல்வியுரை : எந்நாளும் முடிவுறாத இறை இரக்கத்தை நெருங்குக


செப்.14,2016. கோடை காலம் முடிந்து வரும் இத்தருணத்தில் வெயிலின் தாக்கம் இதமாக இருந்ததால், திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை, வழக்கம்போல் தூய பேதுரு வளாகத்திலேயே இடம்பெற்றது. முதலில், 'இயேசு கூறிய வார்த்தைகளான, “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”என்ற வரிகளுடன் துவங்கும் மத்தேயு நற்செய்தி 11ம் அதிகாரம் 28 முதல் 30 வரையுள்ள இறை சொற்றொடர்கள் வாசிக்கப்பட்டன. அதன்பின் அவ்வார்த்தைகளையொட்டி தன் கருத்துக்களை மக்களோடு பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் மறைக்கல்வி போதனைகளில், நாம், இயேசுவின் இன்கனிவு குறித்து ஆழமாக தியானித்தோம். இன்று இயேசு, ஏழைகளையும், கைவிடப்பட்டோரையும், சிறியோரையும் தன்னிடம் வரும்படி அழைப்பதைக் காண்கிறோம். வல்லவர்களின் தொடர்பு ஏதும் இல்லாதவர்கள், இறைவனில் தங்கள் முழு நம்பிக்கையை கொள்ள முடியும் (மத். 11:28-30). தங்களுடைய சக்தியின்மையால் அவர்கள், இறைஇரக்கத்தில் முழு நம்பிக்கைக் கொள்கின்றனர், மற்றும், தங்களின் ஒரே உதவிக்கரமாக இருக்கும் இயேசுவிடம் வருகின்றனர். இந்த யூபிலி ஆண்டில், உலகமனைத்திலும் உள்ள திருப்பயணிகள் அனைவரும், மனமாற்றத்தைத் தேடி, இரக்கத்தின் புனித கதவின் நுழைவாயில் வழியாகச் செல்கின்றனர். எந்நாளும் முடிவுறாத இறை இரக்கத்தை நாம் நெருங்கிச் செல்லும்போது, நாம் அவரின் அழுத்தாத நுகத்தையும், எளிதான சுமையையும் கண்டுகொள்வோம். மனித குலத்தின் தேவைகளையும் சுமைகளையும் தன்னில் சுமக்கும் இயேசு, மீட்படையும் வழியை நமக்குக் காண்பிக்கிறார். அவரின் துன்பங்களில் நாம் பங்கெடுப்பதன் வழியாக, நமக்கென அவர் வகுத்துள்ள இறைத் திட்டத்தை நாம் அறிந்துகொள்வதுடன், அவரில் உண்மையான இளைப்பாறுதலையும் பெற்று, அவரின் மீட்புத் திட்டத்தில் பங்குபெறும் தகுதியுடையவர்களாக மாறுகிறோம். ஏழைகளுக்கும், வாழ்வில் துன்பங்களை அனுபவிப்போருக்கும், இயேசு ஆற்றிய பணிகளிலிருந்து நாமும் கற்றுக்கொள்ளவேண்டும் என, இயேசு நம்மை அழைக்கிறார். நாம் சோர்வடைந்திருக்கும்போதோ, அல்லது, மனவேதனையில் இருக்கும்போதோ, அச்சம் கொள்ளத் தேவையில்லை, ஏனெனில் இயேசுவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கை, நம்மை ஒருநாளும் கைவிடாது. ஆகவே, இயேசுவிடம் வந்து, அவரில் நம்பிக்கைக் கொள்வோம், அவரில் இளைப்பாறுவோம், மகிழ்ச்சியோடு அவருக்குப் பணிபுரிவோம்.

தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த விசுவாசிகளுக்கு இவ்வாறு, தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.