2016-09-14 16:47:00

திருத்தந்தை: இறைவன் பெயரால் கொலை செய்வது, சாத்தானின் வழி


செப்.14,2016. இறைவனின் பெயரைப் பயன்படுத்தி கொலை செய்வது, சாத்தானின் வழி என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கினார்.

ஜூலை மாதம் 26ம் தேதி பிரான்ஸ் நாட்டில் கொலை செய்யப்பட்ட அருள் பணியாளர் Jacques Hamel அவர்களின் நினைவாக திருத்தந்தை நிறைவேற்றியத் திருப்பலியில், Rouen மறைமாவட்டப் பேராயர், Dominique Lebrun அவர்களும், பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்திருந்த 80க்கும் மேற்பட்ட திருப்பயணிகளும் கலந்துகொண்டனர்.

திருச்சிலுவை உயர்த்தப்பட்டத் திருநாள், செப்டம்பர் 14ம் தேதி கொண்டாடப்படுவதை தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைத் தொடர்ந்து, கடந்த 20 நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்களின் மறைசாட்சிய மரணங்களும் தொடர்கின்றன என்று எடுத்துரைத்தார்.

கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுறுத்தும் திருப்பலியை ஆற்றிக்கொண்டிருந்த வேளையில், அருள்பணி Hamel அவர்கள் கொல்லப்பட்டது, அவரையும், மறைசாட்சிகளின் தொடர் சங்கிலியில் ஒருவராக இணைத்துள்ளது.

'எங்கள் தெய்வங்களே மேலானவர்கள், எனவே, அவர்களுக்கு பலி செய்யுங்கள்' என்று முதல் கிறிஸ்தவர்களை கட்டாயப்படுத்தியபோது, தெய்வங்களுக்குப் பலி செலுத்துவதற்குப் பதில், உண்மைக் கடவுளுக்கு, தங்களையே பலியாகத் தந்தனர் மறைசாட்சிகள் என்று தன் மறையுரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை.

மென்மையான குணம் கொண்ட அருள்பணி Hamel அவர்கள், சமாதானத்தை வளர்க்க அரும்பாடுபட்டார் என்பதை சிறப்பாகக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த சமாதானத்திற்காக செபிக்கும் திருப்பலி வேளையில் அவர் கொல்லப்பட்டார் என்று கூறினார்.

இறைவனின் பெயரால் நிகழும் கொலைகளுக்குக் காரணம், சாத்தான் என்பதை நன்குணர்ந்த அருள்பணி Hamel அவர்கள், தன்னைக் கொலை செய்வது சாத்தானின் வேலையே என்பதை உணர்ந்து, 'அகன்றுபோ, சாத்தானே!" என்று கூறியது, தன் கவனத்தை அதிகம் ஈர்த்தது என்று திருத்தந்தை தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

சாந்தம், பொறுமை, உடன்பிறந்த உணர்வு ஆகிய குணங்களில் நாம் வளர்வதற்கும், இறைவனின் பெயரால் நிகழும் கொலைகளுக்குக் காரணம், சாத்தான் என்ற உண்மையை துணிந்து சொல்வதற்கும், மறைசாட்சியாக உயிர் துறந்த அருள்பணி Hamel அவர்களின் பரிந்துரையை வேண்டுவோம் என்று திருத்தந்தை தன் மறையுரையை நிறைவு செய்தார்.

அருள்பணி Jacques Hamel அவர்களுக்காக நிறைவேற்றப்பட்ட இத்திருப்பலியில், அருள்பணியாளரின் புகைப்படம் பீடத்தில் வைக்கப்பட்டிருந்தது என்பதும், திருத்தந்தை ஆற்றிய இத்திருப்பலி, வத்திக்கான் தொலைக்காட்சி வழியே, நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.