2016-09-14 16:40:00

இது இரக்கத்தின் காலம்... – ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு


காட்டை ஒட்டியப் பகுதியில் வாழ்ந்துவந்த ஒருவர், அழகிய புள்ளிமான் ஒன்றை வீட்டில் வளர்த்து வந்தார். ஒருநாள் அந்த மான் மாயமாய் மறைந்துவிட்டது. அவருக்கோ ஆத்திரம். அந்த மானை யார் பிடித்துக்கொண்டு போயிருப்பார்கள், அவன் எங்கே இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் கோபமாக உருவெடுத்தது. உடனே கடவுளை வேண்டினார், ‘கடவுளே எனக்கு தரிசனம் தா...!’ என்று. கடவுளும் வந்தார்...! ‘பக்தா என்னை அழைத்ததன் காரணம் என்ன?’, என கடவுள் கேட்டார். பக்தர் கடவுளிடம், ‘தெய்வமே… நான் ஆசையாய் ஒரு மான் வளர்த்தேன். அந்த மானைக் காணவில்லை. அந்த மானைத் திருடியவன் யாராக இருப்பினும், அவன் என் முன்னே வரவேண்டும். அவனை என் கோபம் தீர அடிக்க வேண்டும்’ என்று கேட்டார்.

வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் கடவுள், பக்தனின் கோரிக்கைக்குத் தயங்கினார். ‘பக்தா, உன் மானை திருப்பித் தருகிறேன். அது காணாமல் போனதற்கு காரணமானவர் யார் என்று கேட்காதே’ என்றார். ‘இல்லை.. என் மனம் எவ்வளவு கலங்கி இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். அதனால் அவனைப் பழிவாங்காமல் விடமாட்டேன்’, என்று பிடிவாதமாகக் கேட்டார்.

‘சரி.. தந்தேன் வரம். உன் மானை திருடி சென்றவர் யாரோ, அவர் உன் பின்னால் நிற்கிறார். தண்டித்துக்கொள்’ என கூறி, கடவுள் மறைந்துவிட்டார். பக்தர் திரும்பிப் பார்த்தார், அங்கே நின்றது ஒரு சிங்கம். பழிவாங்கும் கோபம் மறைந்தது, பயம் பிடித்துக்கொண்டது. கை கால் எல்லாம் நடுங்கத் தொடங்கியது. ‘கடவுளே என்னை காப்பாற்று’ என்று கத்தியபடி, கண் மண் தெரியாமல் ஓட தொடங்கினார்.

கடவுள் சிரித்தார். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுதானே. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.