2016-09-13 16:42:00

மத்தியக் கிழக்கு கிறிஸ்தவர்கள் இரண்டாம் தர குடிமக்களல்ல‌


செப்.13,2016. மத்தியக் கிழக்குப் பகுதியில் தொடர்ந்து வாழ விரும்பும் அப்பகுதி கிறிஸ்தவர்கள், இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுவது நீக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் Knights of Colombus அமைப்பின் தலைவர்.

சித்ரவதைப்படுத்தப்படும் மத்தியக் கிழக்குப் பகுதி கிறிஸ்தவர்கள் குறித்து அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டனில் இடம்பெற்ற தேசிய கருத்தரங்கில் உரையாற்றிய இவ்வமைப்பின் தலைவர் கார்ல் ஆன்டர்சன் அவர்கள், மத்தியக் கிழக்குப்பகுதியின் பாகுபாட்டு நிலைகள் அகற்றப்படவேண்டும் என விண்ணப்பித்தார்.

மத்தியக் கிழக்குப் பகுதிக்கென அமரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து அனுப்பப்படும் மக்களின் வரிப் பணத்தால், அப்பகுதியில் மத சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாட்டு நிலைகள் உருவாக்கப்படவில்லை என்பது உறுதிச் செய்யப்படவேண்டும் என்றார் ஆன்டர்சன்.

ஈராக் மற்றும் சிரியாவில் துன்பங்களை அனுபவித்துவரும் கிறிஸ்தவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண அமெரிக்க ஐக்கிய நாடு உதவ வேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்த ஆன்டர்சன் அவர்கள், வாளால் துவக்கப்பட்ட இந்த போர், பாராமுகம் என்பதன் வழியாக தொடரப்பட அனுமதிக்கக் கூடாது எனவும் கூறினார்.

மத்தியக் கிழக்குப் பகுதி கிறிஸ்தவ அகதிகளுக்கு உதவ 1 கோடியே 10 இலட்சம் டாலர்களை திரட்டி வழங்கியுள்ளது, Knights of Colombus  அமைப்பு.

ஆதாரம் : CNA/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.