2016-09-13 16:36:00

பொருளாதாரம், வருவாயை அல்ல, மனிதனை முதன்மையாகக் கொண்டது


செப்.13,2016. வருவாயை முதன்மை நோக்கமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகளிலிருந்து விலகி, வேலை வாய்ப்புகளையும் பயிற்சியையும் உருவாக்கி, மனிதர்களில் முதலீடுச் செய்யும் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஒவ்வொரு பொருளாதார தலைவரின் சமூகப் பொறுப்புணர்வுகள் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதை மையமாக வைத்து உரோம் நகரின் திருச்சிலுவை பாப்பிறை பல்கலைக்கழக கருத்தரங்கில் இச்செவ்வாய்க்கிழமையன்று துவக்க உரையாற்றிய, திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், வருவாயை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படும் பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விளக்கினார்.

நுகர்வுக் கலாச்சாரம், பொருள்களை பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியும் கலாச்சாரம் மற்றும் பொருளாதார அளவில் மக்களிடையே நிலவும் சரிநிகரற்ற தன்மைகள் குறித்தும் விவரித்த கர்தினால் டர்க்சன் அவர்கள், இத்தகையப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது அரசின் கடமை என்று எவரும் ஒதுங்கிவிட முடியாது, மாறாக, பொதுநலனுக்காக பணியாற்றுவது ஒவ்வொருவரின் கடமை எனவும் கூறினார்.

இன்றையப் பொருளாதாரக் கொள்கைகள் குறித்த இக்கருத்தரங்கில், திருப்பீடத்திற்கான ஜெர்மன், நெதர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் தூதர்களும், தொழில்துறையினரும், அறிவியலாளர்களும், சமூகத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.