2016-09-12 14:10:00

இது இரக்கத்தின் காலம் : உள்ளிருக்கும் ஆற்றலை உணர்வதற்காக...


ஒரு காலத்தில், மிகப்பெரிய பேரரசர் ஒருவர், பஞ்சவர்ண கிளியை நற்பேறின் அடையாளமாகக் கருதி வந்தார். அவரிடம், சீனாவைச்  சேர்ந்த அறிஞர் ஒருவர், தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளைப் பரிசளித்தார். அப்பரிசில் மிகவும் அகமகிழ்ந்த பேரரசர், தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து, இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பறப்பதற்குப் பயிற்சியளியுங்கள் என்று ஆணையிட்டார். மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? என்பதைச் தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்துக் கேட்டார் பேரரசர். “அரசே, இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையை விட்டு நகர மறுக்கிறது” என்றார். உடனே பேரரசர், தனது நாட்டில் உள்ள புகழ் பெற்ற கால்நடை மருத்துவர்களையும், பறவையியல் நிபுணர்களையும் அழைத்து, பறவை ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு கட்டளையிட்டார். அவர்களும் அதை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, “இந்தப் பறவையிடம் எந்தக் குறையுமில்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை என்றனர். சற்று சிந்தித்த பேரரசர், நாட்டுப்புற விவசாயிகளிடம் இந்தப் பணியைக் கொடுக்குமாறு காவலர்களிடம் கூறினார். சில நாள்களில் அந்தக் கிளி மரத்தைச் சுற்றி, அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப்பதைப் பார்த்தார் பேரரசர். இந்த அற்புதத்தைச் செய்த விவசாயியை அழைத்து, “எல்லாரும் முயற்சி செய்து தோற்றுவிட்ட நிலையில், நீ மட்டும் கிளியை எப்படி பறக்கச் செய்தாய்?” என்றார் பேரரசர். அதற்கு விவசாயி, “அது மிக எளிது அரசே. மரத்தில் ஏறி, அந்தப் பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டி விட்டேன். வேறொன்றுமில்லை!” என்று சொன்னார். நமது சக்தியை நாம் உணர வேண்டுமென்பதற்காக, இறைவனும், சிலசமயம் அந்த விவசாயிபோல, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டி விடுகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.