செப்.10,2016. அன்பு இதயங்களே, இச்சனிக்கிழமை காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,
வழங்கிய சிறப்பு யூபிலி பொது மறைக்கல்வியுரையைக் கேட்பதற்கு, வத்திக்கான் தூய பேதுரு
வளாகத்தில், முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். இவர்களுக்கு, இரக்கமும்
மீட்பும் என்ற தலைப்பில் மறைக்கல்வியுரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். முதலில்,
தூய பேதுரு எழுதிய முதல் திருமுகத்தில், இறைவனின் இரக்கம் பற்றிப் பேசும் பகுதி(1பேது.1,18-21)
வாசிக்கப்பட்டது. பின்னர், மறைக்கல்வியுரையைத் தொடங்கிய திருத்தந்தை, அன்புச் சகோதர,
சகோதரிகளே, காலை வணக்கம். இரக்கத்தின் யூபிலி ஆண்டின் நம் மறைக்கல்வியுரையில், இன்று,
மீட்பு பற்றிச் சிந்திப்போம். இறைவன், தம் மகன் இயேசுவின் உயர்மதிப்புள்ள இரத்தத்தால்
நம்மை விடுவித்து, மனித சமுதாயம் முழுவதையும் மீட்டார் என்று சொல்லி, மேலும் தொடர்ந்து
உரையாற்றினார்.
நாம் எத்தனை வழிகளில், போலியான சுதந்திரத்தால் அடிமைப்படுத்தப்பட்டுள்ளோம்! நாம் உண்மையிலேயே
விடுதலைபெற நமக்கு எவ்வளவு தூரம் கடவுள் தேவைப்படுகிறார்! கடவுளின் குழந்தைகளுக்குரிய
மாண்புக்கு உயர்த்தப்பட்ட, புதிய வாழ்வுக்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம். மன்னிப்பு, அன்பு
மற்றும் மகிழ்வை நாம் பெறுவதற்காக, கடவுளின் மாசு மறுவற்ற ஆட்டுக்குட்டியான இயேசு, நமக்காகப்
பலியாக்கப்பட்டார். எனவே, நாம் துன்புறும்போதும், சோதனைக்கு உட்படுத்தப்படும்போதும்,
சிலுவையில் அறையுண்ட இயேசுவை, மிக உருக்கத்தோடு நோக்குவதற்கு, நாம் அழைக்கப்படுகிறோம்.
நமக்காகவும், நம்மிலும், துன்புறும் இயேசு, நம்மீது கடவுள் வைத்துள்ள எல்லையற்ற அன்பை
வெளிப்படுத்துகிறார். அவர் ஒருபோதும் நம்மைக் கைவிடமாட்டார். ஆண்டவர் நம் பலவீனங்களையும்,
நம் பாவங்களையும் அறிகிறார். எனினும், நம் தேவைகள் மிகுதியானவை. அவரின் இரக்கம் அதைவிட
மிகுதியானது. அந்த இரக்கம் நம் இதயங்களை நிரப்புகிறது. எனவே, அன்புச் சகோதர, சகோதரிகளே,
அவருக்கு நம் இதயங்களைத் திறப்போம். அவரின் அருளைப் பெறுவோம். ஏனென்றால், திருப்பாடல்
சொல்வதுபோல, பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது. மிகுதியான மீட்பு அவரிடமே உள்ளது. இதற்கு நன்றாகச்
செவிமடுத்தீர்களா? என்று கேள்வி கேட்டு, இத்திருப்பா வரிகளை அனைவரும் சேர்ந்து சொல்லுமாறுக்
கூறி, இச்சனிக்கிழமை யூபிலி மறைக்கல்வியுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பின்னர், கடவுள், தம் ஒப்புரவாலும், கனிவான இரக்கத்தாலும் உங்கள் எல்லாரையும் நிரப்புவாராக
என, அனைத்துப் பயணிகளையும் வாழ்த்தி, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |