2016-09-10 13:23:00

இது இரக்கத்தின் காலம் - ஒரே நிறம், ஒரே இனம், ஒரே மதம்


2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி, நியூ யார்க் நகரில், உலக வர்த்தக மையத்தின் இரு அடுக்குமாடி கட்டடங்களில் விமானங்கள் மோதி, அவை இடிந்து விழுந்தன. இந்நிகழ்வை மையப்படுத்தி, பல நூறு கட்டுரைகளும், நூல்களும் வெளிவந்துள்ளன. இந்த வெளியீடுகளில், 'One' - அதாவது, 'ஒன்று' என்ற தலைப்பில், Cheryl Sawyer என்ற பேராசிரியர் எழுதியிருந்த ஒரு கவிதையின் சில வரிகள் இதோ:

"கரும்புகையும், புழுதியும், சாம்பலும் மழைபோல் இறங்கிவந்தபோது,

நாம் ஒரே நிறத்தவரானோம்.

எரியும் கட்டடத்தின் படிகளில் ஒருவர் ஒருவரைச் சுமந்து இறங்கியபோது,

நாம் ஒரே இனத்தவரானோம்.

சக்தி வேண்டி, முழந்தாள்படியிட்டபோது,

நாம் ஒரே மதத்தவரானோம்.

இரத்ததானம் வழங்க வரிசையில் நின்றபோது,

நாம் ஒரே உடலானோம்.

இந்தப் பெரும் அழிவை எண்ணி, கூடிவந்து அழுதபோது,

நாம் ஒரே குடும்பமானோம்."

ஒரு கொடூரமான நிகழ்வு, நம்மை ஒருங்கிணைத்தது என்பது, வேதனையான ஓர் உண்மை. இக்கவிதை வரிகள் கூறும், ஒரே நிறம், ஒரே இனம், ஒரே மதம், ஒரே குடும்பம் என்பதுதானே, நாம் அனைவரும் கனவு காணும் விண்ணகம். நாம் எழுப்பும் பிரிவுச் சுவர்களுக்குப்பின் இந்த விண்ணகம் காணாமல் போய்விடுகிறது. நாம் எழுப்பிய பிரிவுச் சுவர்கள், 2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி என்ற அந்த ஒரு நாளிலாவது இடிந்து விழுந்ததே என்று எண்ணி, ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் 11ம் தேதியன்று, நாம் நன்றி சொல்லவேண்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.