2016-09-09 16:26:00

போசே கிறிஸ்தவ குழு கருத்தரங்கிற்கு திருத்தந்தை செய்தி


செப்.09,2016.  “ஆண்டவர் ஒவ்வொரு நாளும் நம்மில் பிரசன்னமாக இருந்து, நம் இதயக் கதவைத் தட்டுகிறார்” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டன.

மேலும், இவ்வியாழன் டுவிட்டர் செய்தியாக, “இன்றைய உலகுக்கு இரக்கத்தின் சாட்சிகளாக நம்மை வழங்க வேண்டிய கடமையிலிருந்து நம்மில் எவரும் விதிவிலக்கு பெற்றவர் அல்ல” என்ற வார்த்தைகள் வெளியிடப்பட்டன.

இன்னும், வட இத்தாலியின் போசே(Bose) எனுமிடத்தில், போசே கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழு, ஆர்த்தடாக்ஸ் ஆன்மீகம் பற்றி நடத்திவரும், ஒரு பன்னாட்டுக் கிறிஸ்தவ ஒன்றிப்பு கருத்தரங்கிற்கு, திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் செய்தி அனுப்பியுள்ளார்.

இக்கருத்தரங்கில் பகிர்ந்துகொள்ளப்படும் மறைசாட்சியம் பற்றிய சிந்தனைகள், கிறிஸ்தவ சபைகளுக்கு இடையேயுள்ள வேறுபாடுகளையும் கடந்து, கிறிஸ்தவ ஒன்றிப்பு நோக்கிய பாதையில், அனைத்து கிறிஸ்தவ சபைகளையும் இட்டுச்செல்லும் என்ற திருத்தந்தையின் நம்பிக்கை அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருத்தந்தையின் வாழ்த்தும் அனுப்பப்பட்டுள்ளது.

“மறைசாட்சியமும், ஒன்றிப்பும்” என்ற தலைப்பில், செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய இக்கருத்தரங்கு, செப்டம்பர் 10, இச்சனிக்கிழமையன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.