2016-09-09 16:33:00

திருத்தந்தை பிரான்சிஸ் நிர்வாகத்தில் சிறந்தவர்


செப்.09,2016. தான் திருஅவையின் தலைமைப்பணி பொறுப்பிலிருந்து விலகியபோது, இன்னல்களை மீறிய ஒருவகை அமைதியையும், அடுத்து இந்தப் பொறுப்பை ஏற்பவர்க்கு, இப்பணியை விட்டுச்செல்லும் மனஅமைதியையும் உணர்ந்ததாக, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் பத்திரிகையாளர் Peter Seewald அவர்களுக்கு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வழங்கிய ஒரு நீண்ட நேர்காணல், "இறுதி உரையாடல்கள்(The Last Conversations)" என்ற தலைப்பில், ஒரு நூலாக, ஜெர்மன் மற்றும் இத்தாலிய மொழிகளில், செப்டம்பர் 09, இவ்வெள்ளியன்று வெளியாகியுள்ளது.

திருப்பீடச் சீர்திருத்தம், தனது பணி ஓய்வு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பற்றிய எண்ணங்கள், நாத்சி ஆட்சியில் தனது குழந்தைப்பருவம், தனது இறையழைப்பு, போரின் கொடுமைகள், வத்திக்கானில் தனது பணி என, பல்வேறு தலைப்புகள் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

நிர்வாகம் தனக்குரிய வலிமைமிக்க கொடையாக இல்லாவிடினும், அதில் தோல்வியடைந்தவராகத் தன்னை பார்க்க இயலவில்லை என்றும், ஆன்மீகக் கேள்விகள் பற்றி சிந்தித்து தியானிக்கும் ஒரு பேராசிரியர் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நடைமுறை சீர்திருத்தம் செய்யக்கூடிய மனிதர் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். 

ஜோசப் இராட்சிங்கர் அவர்கள் வாழ்வின் பல முக்கியமான கட்டங்கள், இப்புதிய நூலில் வெளியிடப்பட்டுள்ளன. இந்நூல், ஜெர்மன் மொழியில் (Letzte Gespräche), ஏறத்தாழ 240 பக்கங்கள் கொண்டுள்ளது. இந்நூலின் ஆங்கில பதிப்பு, வருகின்ற நவம்பரில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.