2016-09-08 16:11:00

காஷ்மீரில் அமைதி வேண்டி மலாலா விண்ணப்பம்


செப்.08,2016. காஷ்மீரில் நிலவும் கலவரங்களை முடிவுக்குக் கொணர, ஐ.நா.அவை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அனைத்துத் தரப்பினரும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்ற விண்ணப்பத்தை, நொபெல் அமைதி விருது பெற்ற மலாலா யூசுப்சாய் அவர்கள் வெளியிட்டுள்ளார் என்று, ஆசிய செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

கடந்த இரு மாதங்களாக அப்பகுதியில் நிகழ்ந்துவரும் பல வன்முறைகளில், இதுவரை, 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 1600க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர் என்றும் ஆசிய செய்தி மேலும் கூறுகிறது.

காஷ்மீரில் வாழும் பொது மக்கள், இன்னும் உலகின் பல பகுதிகளில் வாழும் சாதாரண மக்கள் அனைவருமே தங்கள் அடிப்படை உரிமைகளான சுதந்திரத்தோடும், அமைதியோடும் வாழ்வதற்குத் தகுதியுள்ளவர்கள் என்று மலாலா அவர்கள், இப்புதனன்று வெளியிட்ட விண்ணப்பத்தில் கூறியுள்ளார்.

கடந்த இரு மாதங்களாக நடைபெற்றுவரும் இந்த வன்முறைகளால், காஷ்மீரில் உள்ள அனைத்து கல்விக்கூடங்களும் மூடப்பட்டிருப்பதை குறிப்பிட்டுள்ள மலாலா அவர்கள், சிறுவர், சிறுமியருக்கு கல்வி மறுக்கப்படுவது சமுதாயத்தில் ஏற்படும் மற்றோர் அநீதி என்று கூறியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.