2016-09-08 15:09:00

"உரையாடலில் அமெரிக்கா" குழுவினரைச் சந்தித்தத் திருத்தந்தை


செப்.08,2016. பல்சமய உரையாடலுக்காக அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகள் எடுத்துவரும் முயற்சிகளை பாராட்டுவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்தார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் சில அமைப்புகள், மற்றும், அர்ஜென்டீனா நாட்டின் புவனோஸ் அயிரஸ் நகரில் இயங்கிவரும் பலசமய உரையாடல் மையம் ஆகியவை இணைந்து, "உரையாடலில் அமெரிக்கா" என்ற தலைப்பில், உரோம் நகரில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளன.

இக்கருத்தரங்கில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளை இவ்வியாழன் காலை வத்திக்கானில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரையாடல் கலாச்சாரத்தை வளர்க்க அமெரிக்க நாடுகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டினார்.

'இறைவா உமக்கே புகழ்' என்ற தலைப்பில் தான் வெளியிட்டுள்ள திருமடலை மையப்படுத்தி இக்கருத்தரங்கு நடைபெறுவதைக் குறித்துப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயற்கையில் நிலவும் அமைதியையும், ஒருங்கிணைப்பையும் மனிதர்களாகிய நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

நம் பொதுவான இல்லமான இவ்வுலகைக் காப்பதில், மதங்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்பதை வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை, பல தலைமுறைகளாய் நமக்கு வழங்கப்பட்டுள்ள உண்மையான மத உணர்வுகளை மீண்டும் புதுப்பிப்பது நம் கடமை என்று தன் உரையில் குறிப்பிட்டார்.

நம் ஒவ்வொரு சந்திப்பும் விதையாக ஊன்றப்பட்டு, மதிப்பு என்ற நீர் வார்த்து வளர்க்கப்பட்டால், உண்மை என்ற மரம் வேர்விட்டு வளர்ந்து நற்கனிகளைத் தரும் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

சமயங்கள் ஆற்றக்கூடிய இந்த நற்பணியைச் சிதைக்கும் வண்ணம் இன்று மதத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளை வன்மையாகக் கண்டிப்பதும், உண்மையான மத உணர்வு கொண்டவர்களின் கடமை என்று, திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.