2016-09-07 17:14:00

புனித அன்னை தெரேசாவைப் பற்றி, பூனே ஆயர் தாமஸ் தாப்ரே


செப்.07,2016. மதம் என்பது, கண்களுக்குத் தெரியாத ஒரு கருத்து அல்ல, அது, நம்பிக்கையின் விளைவாக, கண்கூடாக வெளிப்படும் செயல்களில் அடங்கியுள்ளது என்பதை, புனித அன்னை தெரேசா உணர்த்திச் சென்றார் என்று, பூனே ஆயர் தாமஸ் தாப்ரே (Thomas Dabre) அவர்கள் கூறினார்.

ஏறத்தாழ 60 ஆண்டுகள் இந்தியாவில் பணியாற்றி, தன்னை ஓர் இந்தியராகவே மாற்றிக்கொண்ட அன்னை தெரேசா அவர்களைச் சந்தித்த அனைவரும், ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய ஆயர் தாப்ரே அவர்கள், தான் இப்புனிதரைச் சந்தித்த நிகழ்வையும் நினைவுகூர்ந்தார்.

பாரத இரத்னா, அமைதியின் நொபெல் பரிசு போன்ற பல உயரிய விருதுகளைப் பெற்றிருந்தாலும், எளிமையின் ஓர் இலக்கணமாக வாழ்ந்த புனித அன்னை தெரேசாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல உள்ளன என்று, ஆயர் தாப்ரே அவர்கள், எடுத்துரைத்தார்.

அவரது பணியின் வழியாக மக்களை மதமாற்றம் செய்தார் என்ற தவறான செய்திகளை  பரப்பி வரும் அரசியல்வாதிகளுக்கு பதில் தரும் வகையில், பல்சமய உரையாடல் என்ற உயரிய விழுமியத்திற்கு அவர் ஒரு நடைமுறை எடுத்துக்காட்டாக விளங்கினார் என்று ஆயர் தாப்ரே அவர்கள், வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.