2016-09-07 16:01:00

புதன் மறைக்கல்வியுரை : இரக்கத்தின் கருவிகளாக செயல்பட அழைப்பு


செப்.,07,2016. திருத்தந்தையின் இப்புதன் மறைக்கல்வி உரை, தூய பேதுரு வளாகத்தில் இடம்பெற்றிருக்க, கடந்த ஞாயிறு அன்னை தெரேசாவின் புனிதர் பட்ட நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்கள் கூட்டத்துள் பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர். முதலில் புனித மத்தேயு நற்செய்தியின் 11ம் பிரிவின் 2 முதல் 6 வரையிலான சொற்றொடர்கள் வாசிக்கப்பட்டன. “வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?“ என்ற கேள்வியை இயேசுவிடம் கேட்க தன் சீடர்களை அனுப்பி வைக்கிறார், தூய திருமுழுக்கு யோவான். ஏனெனில், இயேசுவின் பணி இங்கு தூய திருமுழுக்கு யோவான் எதிர்பார்த்ததுபோல் இல்லை. இறைநீதி குறித்த தூய திருமுழுக்கு யோவானின் எதிர்பார்ப்புகளுக்கு இயைந்ததாக இயேசுவின் பணியை அவர் பார்க்கவில்லை. இயேசுவோ, தூய திருமுழுக்கு யோவானின் சீடர்களிடம், அவர்கள் கண்டதையும் கேட்டதையும் சென்று கூறுமாறு பணிக்கிறார். அதாவது, "பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது” என அவர்களிடம் பதிலுரைக்கின்றார், இயேசு. தன்னை இறைஇரக்கத்தின் கருவியாக இங்கு காட்டுகிறார், இயேசு. தன்னுடைய ஆறுதலையும் மீட்பையும் அனைவருக்கும் கொணர்வதன் மூலம் இறைநீதியை வெளிப்படுத்துகிறார் அவர்.

பாவிகளைத் தண்டிக்கவும், தீயோரை நசுக்கவும் இறைவன் தன் மகனை இவ்வுலகிற்கு அனுப்பவில்லை. மாறாக, மனமாற்றத்திற்கு அழைப்பு விடவும், அதன் வழியாக, அவர்களும் இறைவனிடம் திரும்புவதற்கு வழிகாட்டவும் வந்தார் இறைமகன். தூய யோவானின் சீடர்களிடம் அவர் மேலும் கூறுகிறார், ' என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்' என்று. இந்தத் தயக்கம் எப்போது ஏற்படுகின்றது என்றால், நாம் மெசியாவைக் குறித்து தவறான ஒரு பிம்பத்தைக் கொண்டிருக்கும்போதும், நம்மிடையே இறைபிரசன்னத்தை அனுபவிப்பதற்குத் தடையாக இருப்பதற்குக் காரணமாகும் ஓர் இறைப் பிம்பத்தை நாமே உருவாக்கிக்கொண்டு வாழும்போதும், இந்தத் தயக்கம், தடையாக மாறுகின்றது. நம்முடைய கருத்துக்கும் விருப்பத்துக்கும் ஏற்றாற்போல் நாம் இறைவனை தாழ்த்திக் கொள்ளும்போதும்,  நம்முடைய சுய தேவைகளுக்காக அவர் பெயரைக் கொண்டு நியாயப்படுத்தும்போதும், துன்பம் வரும் வேளைகளில் மட்டும் அவரைத் தேடும்போதும், நாம் நம்மையும் தாண்டிச் சென்று இவ்வுலகின் மறைப்பணியாளர்களாக செயல்படவேண்டும் என, நம் விசுவாசம் விடுக்கும் அழைப்பைத் தவறவிடுகிறோம். இறைவனின் இரக்கம் நிறைந்த செயல்களை அனுபவிப்பதற்கு நம்மில் தடையாக இருக்கும் அனைத்தையும் அகற்றுவதற்கான நம் அர்ப்பணத்தை புதுப்பிப்போம். அதேவேளை, அவரின் இரக்கத்தின் அடையாளங்களாக இருக்க உதவும் ஆழமான விசுவாசத்தை நமக்கு வழங்குமாறும் வெண்டுவோம்.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.