2016-09-07 16:49:00

சிறைப்பட்டோருக்கு வழங்கப்படும் பணி, கலாச்சார அளவு கோல்


செப்.07,2016. சிறைப்பட்டோரை மீண்டும் நம் சமுதாயத்தில் இணைப்பதற்கு, அவர்களை நம்மிடையே வாழ வரவேற்க வேண்டும் என்று இங்கிலாந்து கர்தினால், வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள் கூறினார்.

சிறைப்பட்டோரின் ஆன்மீக வழிகாட்டிகளுக்கு,  செப்டம்பர் 6, இச்செவ்வாயன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், சிறைப்பட்டோரின் ஆன்மீக வழிகாட்டிகள், பரிவுடன் ஆற்றிவரும் பணிக்கு பாராட்டு தெரிவித்தார்.

சமுதாயத்தின் மிக நலிந்த குழுவினரில் ஒன்றாக விளங்கும் சிறைப்பட்டோருக்கு, இரக்கமும் மதிப்பும் வழங்க, இரக்கத்தின் சிறப்பு யூபிலி நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது என்று, கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்தவர்கள், சிறைப்பட்டோரின் ஆன்மீக வழிகாட்டிகளாக இணைந்து உழைப்பது, மிகுந்த ஊக்கத்தைத் தருகிறது என்று கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

சிறைகளில் நிலவும் சூழல், கைதிகளை மனிதர்களாக மதிப்பது கிடையாது என்பதை வலியுறுத்திக் கூறிய கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், சிறைப்பட்டோருக்கு வழங்கப்படும் கனிவான பணி, ஒரு சமுதாயத்தின் கலாச்சார அளவு கோல் என்பதையும் எடுத்துரைத்தார்.

நடைபெறும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஒரு முக்கிய பகுதியாக, சிறைப்பட்டோரின் யூபிலியை சிறப்பிக்க, நவம்பர் 6ம் தேதி, ஞாயிறன்று புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் காலை 10 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலியை தலைமையேற்று நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.