2016-09-07 16:13:00

அடுத்த இரு மாதங்கள் திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்வுகள்


செப்.07,2016. செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் திருவழிபாட்டு நிகழ்வுகள், மற்றும் அவர் மேற்கொள்ளும் பயணங்கள் குறித்த விவரங்களை, வத்திக்கான் திருவழிபாட்டுத் துறையின் தலைவர், அருள்பணி குயிதோ மரினி அவர்கள் வெளியிட்டுள்ளார்.

செப்டம்பர் 25, ஞாயிறன்று, மறைக்கல்வி ஆசிரியர்களுக்கென குறிக்கப்பட்டுள்ள யூபிலியையொட்டி, காலை 10.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றுவார்.

செப்டம்பர் 30 வெள்ளி முதல், அக்டோபர் 2, ஞாயிறு முடிய, ஜார்ஜியா மற்றும் அசர்பைஜான் நாடுகளுக்கு திருத்தூது பயணம் மேற்கொள்கிறார், திருத்தந்தை.

மரியாவின் யூபிலி என்ற கொண்டாட்டத்தையொட்டி, அக்டோபர் 8ம் தேதி, சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு புனித பேதுரு வளாகத்தில் திருவிழிப்பு வழிபாட்டை தலைமையேற்று நடத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடுத்தநாள் ஞாயிறன்று, அதே வளாகத்தில், காலை 10.30 மணிக்கு திருப்பலி நிகழ்த்துவார்.

அக்டோபர் 16ம் தேதி ஞாயிறு, காலை 10.15 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நடைபெறும் சிறப்புத் திருப்பலியில், அருளாளர்களான Salomone Leclercq, José Sanchez del Rio, Manuel González García, Lodovico Pavoni, Alfonso Maria Fusco, José Gabriel del Rosario Brochero, மற்றும் மூவொரு இறைவனின் Elisabeth ஆகிய எழுவரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதர்களாக அறிவிக்கிறார்.

1517ம் ஆண்டு, மார்ட்டின் லூத்தர் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து பிரிந்து, Protestant Reformation என்ற அமைப்பை உருவாக்கியதன் 500ம் ஆண்டு துவக்கத்தை, லூத்தரன் சபையினரோடு இணைந்து சிறப்பிக்க, அக்டோபர் மாத இறுதி நாளன்றும், நவம்பர் மாத முதல் தேதியன்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுவீடன் நாட்டிற்கு திருத்தூது பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

சிறைப்பட்டோரின் யூபிலியையும், வீடற்றோர் யூபிலியையும் சிறப்பிக்கும் விதமாக, நவம்பர் 6ம் தேதி, மற்றும் 13ம் தேதி ஆகிய இரு ஞாயிறுகளில் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் காலை 10 மணிக்கு திருப்பலியை தலைமையேற்று நிகழ்த்துவார் திருத்தந்தை.

நவம்பர் 20, கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதி நிகழ்வாக, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் காலை 10 மணிக்கு திருப்பலியாற்றும் திருத்தந்தை, திருப்பலியின் இறுதியில், புனிதக் கதவை மூடி, இந்தப் புனித ஆண்டை முடிவுக்குக் கொணர்வார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.