2016-09-06 16:02:00

பிறரை மன்னிக்க இறைவன் கற்றுத் தருவதே மிகப் பெரும் கொடை


செப்.,06,2016. 'பிறரை மன்னிக்கவும், அதன் வழியாக இறை இரக்கத்தைத் தொடவும் நமக்குக் கற்பிப்பதன் வழியாக மிகப்பெரும் கொடை ஒன்றை இறைவன் நமக்குத் தந்துள்ளார்' என தன் டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாயன்று எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இச்செவ்வாய்க்கிழமை காலையில், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் உரோம் நகரின் குழந்தைகள் மருத்துவமனையான ‘பம்பினோ ஜேசு’ மருத்துவமனையின் நிர்வாக அவைத் தலைவர், மருத்துவர் மரியெல்லா எனோக் அவர்களை சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சந்திப்பு குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த மருத்துவர் எனோக் அவர்கள், குழந்தைகளிலும், ஏழைகளிலும் உதவித் தேவைப்படுவோரிலும் சிறப்பு அக்கறையுடன் செயல்படும் திருத்தந்தை அவர்கள், அந்த குழந்தைகள் மருத்துவமனைக்கும், ஆப்ரிக்காவில் இந்த மருத்துவமனை ஆற்றிவரும் பணிகளுக்கும் தனிப்பட்ட விதத்தில் நிதியுதவிச் செய்ய உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

மத்திய ஆப்ரிக்க குடியரசின் தலைநகரான பாங்கியில் பம்பினோ ஜேசு மருத்துவமனை ஆற்றிவரும் சிறப்புப் பணிகள் குறித்து திருத்தந்தை மிகவும் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார், மருத்துவர் எனோக்.

இதற்கிடையே, உரோம் நகரிலிருந்து ஏறத்தாழ 600 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மிலான் நகரிலிருந்து சைக்கிள்களில் உரோம் நோக்கி திருப்பயணம் மேற்கொண்ட இளையோர் குழுவை, இச்செவ்வாயன்று, சாந்தா மார்த்தா இல்லத்தின் முன்பகுதியில் சந்தித்து அவர்களுக்கு ஆசீர் வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.