2016-09-06 16:34:00

எகிப்தில் கிறிஸ்தவர்களுக்கு ஆறுதல் தரும் புதிய சட்டம்


செப்.,06,2016. வழிபாட்டுத் தலங்கள் குறித்த எகிப்து அரசின் புதியச் சட்டங்கள், நாட்டை நவீனப்படுத்த உதவுபவைகளாக உள்ளன என்றார், அந்நாட்டு திருஅவையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் அருள்பணி Rafic Greiche.

அண்மையில் அரசுக்கும் கிறிஸ்தவத் தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்கள், தற்போது எகிப்து பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்ட அருள்பணி Greiche அவர்கள், இப்புதிய சட்டம் குறித்து விமர்சனங்களை ஒரு சிலர் வெளியிட்டாலும், நாட்டை நவீனமயமாக்குவதற்கு இச்சட்டம் நிச்சயமாக உதவுவதாக இருக்கும் என்றுரைத்தார்.

கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது, ஓட்டமான் ஆட்சிக் காலத்திலிருந்தே அமலில் இருக்கும் பழைய சட்டங்கள், தற்போது திருத்தப்பட்டதன் வழியாக, கிறிஸ்தவர்கள் புதிய வழிபாட்டுதலங்களை கட்டுவதற்கு இது உதவும் எனவும் கூறினார், எகிப்து கத்தோலிக்க திரு அவையின் அதிகாரப்பூர்வ பேச்சாளர்.

வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்கு கிறிஸ்தவர்களுக்குத் தடை இருந்து வந்த நிலையில், தற்போதைய புதிய சட்டத்தின் வழியாக அவர்கள் வழிபாட்டுத் தலங்களுக்கென நகராட்சியிடம் விண்ணப்பிக்கவும், அதற்கான பதிலை நான்கு மாதங்களுக்குள் பெறவும், அனுமதி கிடைக்காதச் சூழலில் நீதி மன்றத்தில் மேல்முறையீடுச் செய்யவும் உரிமைப் பெறுகின்றனர்.

எகிப்தின் மொத்த மக்கள்தொகையில் 10 விழுக்காடாக இருக்கும் கிறிஸ்தவர்கள், அவ்வப்போது இஸ்லாமிய தீவிரவாதிகளால் தாக்கப்படுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.