2016-09-05 15:57:00

இது இரக்கத்தின் காலம் : நல்லாசிரியர் நல்லமுத்து


ஆசிரியர் நல்லமுத்து, தன்னிடம் பயிலும் மாணவர்கள் ஒழுங்காகப் படித்து முன்னேற வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவர். அவரிடம் படித்து வந்த செல்வன் என்ற மாணவன், ஒவ்வொரு பாடத்திலும் எப்போதும் குறைவான மதிப்பெண்களே பெற்று வந்தான். தினமும் வீட்டுப் பாடங்களையும் ஒழுங்காக எழுதி வருவதில்லை. நல்லமுத்து யோசித்தார். அன்று அவனை அழைத்தார். நீ கிராமத்துப் பையன். நான் உனக்குச் சொல்வதுபோல் நீ நடந்தால், நீயும் மற்ற மாணவர்கள் போல நன்கு படித்து வாழ்வில் முன்னுக்கு வரலாம் என்றார். அவனும் சரி என ஒத்துக்கொண்டான். மறுநாள் செல்வன் வீட்டுப்பாடம் செய்து வரவில்லை. அவனைத் தட்டிக் கொடுத்த ஆசிரியர், கவலைப்படாதே, உனக்கு கல்வி தேவதை ஐந்து நாள்களுக்கு உதவி செய்யும் என்று கூறிவிட்டு அவனை அமரச் செய்தார். அன்றைய மதிய உணவு இடைவேளையில் வகுப்பு மாணவர்கள் அனைவரும் வெளியே சென்றபோது, செல்வத்தின் வீட்டுப் பாட நோட்டுப் புத்தகத்தையெடுத்து, அவன் செய்யாத பாடங்களை எழுதி அவனுடைய பைக்குள் வைத்துவிட்டார். பிறகு அன்று கொடுக்க இருக்கும் கணக்குப் பாடத்துக்கான வீட்டு வேலையையும் அவனுடைய கணக்கு நோட்டில் எழுதி வைத்துவிட்டார். அன்று வகுப்பு முடியும்போது செல்வத்தின் நோட்டுப் புத்தகத்தில் தான் எழுதி வைத்த கணக்குப் பாடங்களையே வீட்டு வேலையாக எல்லா மாணவர்களுக்கும் கொடுத்தார். மறுநாள் கணக்குப் பாட வீட்டுப் புத்தகத்தை அனைவரும் காட்டியபோது, செல்வன் மட்டும் அழுதபடியே நின்றான். செல்வா, உன் கணக்கு நோட்டை எடுத்துக்கூடவா நீ பார்க்கவில்லை? என்று கேட்டபடியே அந்த நோட்டை செல்வத்தின் முன்னிலையில் பிரித்துப் பார்த்தார். அதில் அழகிய கையெழுத்தில் வீட்டுப் பாடங்கள் அனைத்தும் எழுதியிருப்பதைப் பார்த்த செல்வன் மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தான். இவ்வாறு ஆசிரியர், ஆங்கிலம், அறிவியல், வரலாறு என மூன்று நாட்களுக்கு வீட்டுப் பாடங்களைக் கொடுத்து, அவைகளை செல்வன் அறியாத சமயம் பார்த்து எழுதி வைத்தார். மகிழ்ச்சியில் துள்ளிய செல்வாவைப் பார்த்து ஆசிரியர், இத பாருப்பா செல்வா… கல்வி தேவதை ஐந்து நாள்களுக்குத்தான் உதவி செய்யும் என்று முன்பே சொன்னேன் அல்லவா? இப்போது இரண்டு நாள்கள் முடிந்துவிட்டன. இன்னும் மூன்று நாட்கள்தான் உள்ளன. அதற்குள் நீ முயற்சியெடுத்து, படிக்க வேண்டும் என்றார். செல்வன் தன்னம்பிக்கையுடன் தலையாட்டினான். இப்போது அவனுக்குப் படிக்க வேண்டும் என்ற ஊக்கமும், அதற்காக முயற்சி செய்தால் தானும் வாழ்வில் முன்னேற முடியும் என்ற எண்ணமும் மேலோங்கின. செப்டம்பர் 05, இந்திய தேசிய ஆசிரியர் தினம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.