2016-09-05 16:17:00

அன்பின் அடையாளமாக தரப்பட்டள்ள அன்னை தெரேசாவுக்கு நன்றி


செப்.,05,2016. இறைவன் தன் அன்பின் அடையாளமாக புனித அன்னை தெரேசாவை தந்ததற்கும், அன்னை தெரேசாவின் வீரத்துவமான விசுவாச சாட்சியத்திற்கும் நன்றி கூறுவோம் என உரைத்தார், திருப்பீடச் செயலர் கர்தினால் பியேத்ரோ பரோலின்.

அன்னை தெரேசாவை புனிதராக அறிவித்ததற்கு மறுநாளான இத்திங்களன்று, தூய பேதுரு வளாகத்தில் விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய கர்தினால் பரோலின் அவர்கள், ஏழைகளுக்கும், கைவிடப்பட்டோருக்கும், தன்னலமற்ற சேவையாற்றியதில் நம் அனைவருக்கும் மிகப்பெரும் எடுத்துக்காட்டாக அன்னை தெரேசா உள்ளார் என கூறினார்.

'ஏழைச் சகோதரர் ஒருவருக்கு நீங்கள் செய்ததெல்லாம் எனக்கேச் செய்ததாகும் என இயேசு கூறிய வார்த்தைகளைப் பின்பற்றியதே, அன்னை தெரேசாவின் வாழ்வு இரகசியம் எனவும் எடுத்துரைத்தார் கர்தினால் பரோலின்.

தன்னுடைய சேவைகளுக்கு தான் காரணமல்ல, மாறாக தான் இறைவனின் கைகளில் வெறும் ஒரு வரைவு கோலே எனக்கூறி, தன் தாழ்மையையும், இறைவனில் தான் கொண்டிருந்த ஆழ்ந்த விசுவாசத்தையும் வெளிப்படுத்திய புனித அன்னை தெரேசா, கொடுப்பதில் நாம் காயப்படும்வரை கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் எனவும் கூறினார், திருப்பீடச் செயலர்..

சிலுவையில் தொங்கியபோது இயேசு கூறிய ஏழு வார்த்தைகளும் தன் துறவுசபை இல்லங்களில் எழுதி மாட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த புனித அன்னை தெரேசா, ' நான் தாகமாயிருக்கிறேன்' என்ற இயேசுவின் வார்த்தைகளில், ஆன்மாக்களின் மீதான தாகத்தைக் கண்டுகொண்டு பணியாற்றினார் என, மேலும் கூறினார், கர்தினால் பரோலின்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.