2016-09-04 12:40:00

புனிதர் பட்டத் திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை


செப்.04,2016. அன்பு சகோதர, சகோதரிகளே, "கடவுளின் திட்டத்தை அறிபவர் யார்?" (சாலமோனின் ஞானம் 9,13). ஞான நூலிலிருந்து இன்று நாம் செவிமடுத்த முதல் வாசகத்தில் உள்ள இக்கேள்வி, நம் வாழ்வு ஒரு மறைப்பொருள் என்பதையும், அதை அறிந்துகொள்ளும் வழி நம்மிடம் இல்லை என்பதையும் கூறுகிறது. இறைவனின் அழைப்பை உணர்ந்து, அவரது திருவுளத்தை நிறைவேற்றுவதே நமது கடமை. "என் வாழ்வில் ஆண்டவரின் திருவுளம் என்ன?" என்பதை நாம் அறியவேண்டும்.

"உமக்கு உகந்தவற்றை மனிதர் கற்றுக்கொண்டனர்" (சா.ஞா 9,18) என்று ஞான நூலில் வாசிக்கிறோம். இறைவனின் திருவுளத்தைக் கற்றுக்கொள்ள, அவருக்கு எது மிகவும் விருப்பம் என்பதைக் கற்றுக்கொள்ளவேண்டும். "உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்" (ஓசேயா 6,6) என்ற வார்த்தைகளில் நாம் இறைவனின் விருப்பத்தை அறிகிறோம். ஒவ்வொரு இரக்கச் செயலும் இறைவனுக்கு விருப்பமானது, ஏனெனில், காணமுடியாத இறைவனின் முகத்தை, நம் சகோதர, சகோதரிகளிடம் காண்கிறோம். நம் சகோதர, சகோதரிகளின் தேவைகளை நிறைவேற்ற நாம் நம்மையே தாழ்த்தும்போது, இயேசு, உண்பதற்கும், குடிப்பதற்கும், உடுத்துவதற்கும் நாம் உதவுகிறோம். (காண்க. மத்தேயு 25,40)

செபத்திலும், விசுவாச அறிக்கையிலும் கூறுவனவற்றிற்கு செயல்வடிவம் கொடுக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அடுத்தவருக்கு பணிபுரிவோர், அவர்கள் அறியாமலேயே, இறைவனை அன்பு செய்பவர்கள் (காண்க. 1 யோவான் 3,16-18; யாக்கோபு 2,14-18). தேவையில் இருப்போருக்கு உதவி செய்வது மட்டுமே கிறிஸ்தவ வாழ்வு அல்ல. பல்வேறு மனிதாபிமான அமைப்புக்கள் இவ்வகை உதவிகள் செய்கின்றன. கிறிஸ்தவ அன்பு, கிறிஸ்துவின் சீடர்கள் என்பதில் வேரூன்றியுள்ளது.

"பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்று கொண்டிருந்தனர்" (லூக்கா 14,25) என்று இன்றைய நற்செய்தியில் கேட்டோம். இரக்கத்தின் யூபிலியைக் கொண்டாட, இங்கு வந்திருக்கும் இரக்கத்தின் தன்னார்வத் தொண்டர்களே, நீங்களே இயேசுவைப் பின்தொடரும் பெருந்திரளான மக்கள். திருத்தூதர் பவுலின் வார்த்தைகளை உங்களுக்கு நான் கூற விழைகிறேன்: "உம் அன்பைக் குறித்து நான் பெரு மகிழ்வும் ஆறுதலும் கொள்கிறேன். ஆம், சகோதரரே, உம்மால் இறைமக்களின் உள்ளம் புத்துயிர் பெற்றுள்ளது" (பிலமோன் 1,7).

இரக்கத்தின் தன்னார்வத் தொண்டர்கள், எத்தனை பேருக்கு ஆறுதல் வழங்கியுள்ளனர்! எத்தனை கரங்களை, தங்கள் கரங்களில் தாங்கி, எத்தனை கண்ணீரைத் துடைத்துள்ளனர்; அவர்களது தன்னலமற்ற பணியால், எத்தனை உள்ளங்களில் அன்பு ஊற்றப்பட்டுள்ளது!

இயேசுவைப் பின்தொடர்வது, மிக கடினமான பணி; அதனை மகிழ்வோடு ஆற்றுவதற்கு, துணிவும், மன உறுதியும் தேவை. இரக்கத்தின் தன்னார்வத் தொண்டர்கள், தாங்கள் ஆற்றும் பணிகளுக்கு நன்றியோ பாராட்டோ எதிர்பார்ப்பதில்லை. நம்மைச் சந்திக்க இறைவன் தன்னையே தாழ்த்தியதுபோல், நாமும் தேவையில் உள்ளவர்கள் முன் நம்மையே தாழ்த்தி அவர்களைச் சந்திக்கவேண்டும்.

அன்னை தெரேசா அவர்கள், தன் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் இறைவனின் இரக்கத்தை வெளிப்படுத்தும் கருவியாக வாழ்ந்தார். மனித உயிரை, குறிப்பாக, கருவில் உள்ள உயிரை மிகவும் மதித்து, அதற்காகப் போராடினார். சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு, தெருவோரம் கிடந்தவர்கள் முன் தன்னையே தாழ்த்தி பணியாற்றினார். உலக சக்திகளுக்கு முன் தன் குரலை எழுப்பி, அவர்கள் தங்கள் தவறுகளை உணர்வதற்கு முயன்றார். அவரிடம் விளங்கிய இரக்கம், இவ்வுலகிற்கு உப்பாக, ஒளியாக இருந்தது.

கடைநிலை வறியோருக்கு அருகே இறைவன் இருக்கிறார் என்பதற்கு, அன்னை தெரேசாவின் வாழ்வும், பணியும் சான்றாக விளங்குகின்றன. பெண்மைக்கும், அர்ப்பணத்திற்கும் அடையாளமாக விளங்கும் இந்த அன்னையை, இரக்கத்தின் தன்னார்வத் தொண்டர்களுக்கு ஓர் அடையாளமாக நான் வழங்குகிறேன். இறைவனிடமிருந்து இலவசமாகப் பெற்றுக்கொண்ட அன்பிற்கு செயல்வடிவம் கொடுப்பது எப்படி என்பதை, இந்த இரக்கத்தின் பணியாளரிடமிருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டும். மொழி, கலாச்சாரம், இனம், மதம் என்ற அனைத்தையும் கடந்து, இந்த அன்பை எவ்விதம் வழங்கமுடியும் என்று இவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.

"நான் அவர்களது மொழியை பேசுவதில்லை, ஆனால், என்னால் புன்முறுவல் செய்யமுடியும்" என்று அடிக்கடி சொல்லிவந்தவர்,  அன்னை தெரேசா. அவரது புன்சிரிப்பை நம் உள்ளங்களில் தாங்கி, வாழ்வுப் பயணத்தில் நாம் சந்திக்கும் துன்புறுவோருக்கு அதனை வழங்குவோம். இவ்விதம், மனமுடைந்து வாழும் பலருக்கு மகிழ்வையும், நம்பிக்கையையும் வழங்குவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.