2016-09-04 14:03:00

அன்னை தெரேசா அவர்களின் புனிதர்பட்ட நிகழ்வு


செப்.04,2016. அன்பு நேயர்களே, அன்னை தெரேசா என்று, நம் உதடுகள் விரியும்போதே,  அன்னையவர்களின் கருணை பொங்கும் சுருக்கம் நிறைந்த முகம், சேவை மனப்பான்மை, தன்னலமில்லாத அன்பு என, பல நல்லுணர்வுகள் நம் மனக்கண் முன்னால் நிழலாடிச் செல்கின்றன. செப்டம்பர் 4, இஞ்ஞாயிறு நாம் எல்லாரும் எதிர்பார்த்த அந்த புனித நாள், அதாவது அன்னை தெரேசா புனிதராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள். இந்நிகழ்வு இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கியது என்றாலும், பல நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் கூட்டம் காலை ஆறு மணிக்கு முன்னரே, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்திற்குச் சற்றுத் தொலைவிலே காத்து நின்றது. ஏனென்றால், மக்கள் நன்றாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே, வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவதால் இவ்வாறு அவர்கள் நின்று கொண்டிருந்தனர். பல நாடுகளின் மக்கள், தங்கள் நாடுகளின் கொடிகளுடன் வளாகத்தில் அமர்ந்திருந்தனர். இந்திய மரபு சேலையில், அதிக அளவில், இந்தியர்களைக் காண முடிந்தது. வளாகத்தில் முன் வரிசைகளில், 1,500 ஏழைகள் அமர்ந்திருந்தனர். இத்தாலியின் மிலான், பொலோஞ்ஞா, பிளாரன்ஸ், நேப்பிள்ஸ் போன்ற நகரங்களில் அன்னை தெரேசா சபையினர் நடத்தும் இல்லங்களில் வாழும் இவர்களுக்கு, இப்புனிதர்பட்ட திருப்பலி முடிந்தவுடன், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உணவு வழங்கினார். இவர்களுக்கு வழங்கப்பட்ட இத்தாலிய பிரபல உணவான பிட்சாவை, 250 அன்னை தெரேசா சபை அருள்சகோதரிகளும், 50  அருள்சகோதரர்களும் பரிமாறினர். மேலும், அன்னை தெரேசா அவர்களின் புனிதர் பட்ட திருப்பலியில் கலந்துகொண்ட நாடுகளின் பிரதிநிதிகளை, இத்திருப்பலிக்கு முன்னர், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், பியெத்தா சிற்றாலயத்தில் சந்தித்து வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், அன்னை தெரேசா சபை சகோதரிகள் பெருமளவில் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர் என்று சொல்லத் தேவையில்லை.

அன்னை தெரேசா அவர்கள் பெற்றோரின் பூர்வீக நாடான அல்பேனிய அரசுத்தலைவர், அவரின் துணைவியார், அல்பேனியப் பிரதமர், அவரின் துணைவியார், அன்னை தெரேசா பிறந்த மசடோனியா நாட்டின் அரசுத்தலைவர், அவரின் துணைவியார், கொசோவோ அரசுத்தலைவர், தாய்வான் உதவி அரசுத் தலைவர், இஸ்பெயின் அரசர் அரசி, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இன்னும், இத்தாலி, மோனக்கோ, ஹாலந்து, போஸ்னியா-எர்செகொவினா, பனாமா, அமெரிக்க ஐக்கிய நாடு, குரோவேஷியா, மொந்தேநெக்ரோ, ஆஸ்ட்ரியா, நைஜீரியா என, குறைந்தது 15 நாடுகளின் அரசு பிரதிநிதிகள் குழுவும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான குழு, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான குழு என, பல நாடுகளின் பல முக்கிய பிரமுகர்களும், பிற கிறிஸ்தவ சபை மற்றும் பிற மதப் பிரதிநிதிகளும் இத்திருப்பலியில் பங்கெடுத்தனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

காலை 10.30 மணிக்குச் சற்று முன்னதாகவே, புனிதர்பட்டமளிப்புத் திருப்பலிக்கு, ஆயர்கள், கர்தினால்கள் பவனியாக வந்தனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலியைத் தொடங்கினார். பின்னர் திருப்பீட புனிதர் பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள், அன்னை தெரேசா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தார். பின்னர் புனிதர்கள் நெடும்பாடல் பாடப்பட்டது. பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை தெரேசா அவர்கள், திருஅவையின் புனிதர் பட்டியலில் இண்க்கப்படுகிறார் என, இலத்தீனில் செபித்து அறிவித்தார். உடனே விசுவாசிகள் எல்லாரும் கரங்களைப் பலமாகத் தட்டி தங்களின் மகிழ்வை வெளியிட்டனர். பின்னர், பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபை தலைவர் அருள்சகோதரி பிரேமா அவர்களும், மற்றுமொரு சகோதரியும், அன்னை தெரேசா அவர்களின் புனிதப்பண்டத்தைப் பவனியாக எடுத்துச் சென்று, திருப்பலி மேடையில் வைத்தனர். சிலுவையைச் சுற்றி, இதய வடிவில், நீலம், வெண்மை நிறங்களால் அது சூழப்பட்டிருந்தது. அச்சிலுவையின் நடுவில் இப்புனிதப் பண்டம் இருந்தது. சேலையணிந்த ஓர் இந்தியரும், ஓர் ஆப்ரிக்கப் பெண்ணும் தீபங்களை ஏந்திச் சென்று, புனிதப் பண்டத்தின் இருபக்கத்திலும் வைத்தனர். ஒரு குடும்பமும் சிறு பிள்ளைகளுடன் சென்றது. திருப்பலி தொடந்து இடம்பெற்றது. மும்பை கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ், கேரளாவின் சீரோ மலங்கரா வழிபாட்டுமுறை கர்தினால் மார் பசிலியோஸ் கிளீமிஸ், தமிழகத்தின் சிவகங்கை ஆயர் சூசை மாணிக்கம், திண்டுக்கல் ஆயர் தாமஸ் பால்சாமி, தூத்துக்குடி ஆயர் யுவான் அம்புரோஸ், யாழ்ப்பாண ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் உட்பட ஆசிய ஆயர்கள் பலரும் இக்கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றினர். இதில் திருத்தந்தை ஆற்றிய மறையுரையை இப்போது கேட்போம்.

ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இப்புனிதர்பட்ட திருப்பலியில் கலந்துகொண்டனர் என, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் Greg Burke அவர்கள் அறிவித்தார். இத்திருப்பலியின் இறுதியில் ஞாயிறு மூவேளை செப உரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பலி முடிந்து திறந்த காரில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது திரளாகக் கூடியிருந்த மக்கள் மத்தியில் வந்து எல்லாரையும் வாழ்த்தி மகிழ்ச்சிப்படுத்தினார்.

புனித அன்னை தெரேசாவின் ஆசீரைப் பெற்ற மகிழ்வில் அனைவரும் இல்லம் திரும்பினர். அன்னையவர்கள், 1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி, 87வது வயதில் தனது இறுதிமூச்சை விட்டபோது. எதற்கும் கலங்காத கண்களும் கசிந்தன. தான் வாழ்ந்தபோது அன்னையிடம் இருந்த சொத்தெல்லாம் 3 வெள்ளைச் சேலைகளும், ஒரு சிலுவையும், ஒரு செபமாலையும்தான். ஆனால் விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர் அமுதசுரபியாக அள்ளி அள்ளி வழங்கினார். அதனால்தான் ஒரு கவிஞர், "சாக்கடையோரச் சந்ததிக்கும் சாமரம் வீசிய பூமரம்" என, அன்னையைப் புகழ்ந்தார். செப்டம்பர் 5, இத்திங்கள் புனித அன்னை தெரேசா அவர்களின் விழா. இந்நாளில், பிறரன்பிற்கு புதிய இலக்கணத்தை வகுத்த புனித அன்னை தெரசாவிடம் சிறப்பாகச் செபிப்போம். அவரின் எடுத்துக்காட்டான வாழ்வை நாமும் பின்பற்ற முயற்சிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.