2016-09-02 16:31:00

படைப்பைப் பாதுகாப்பதில் மனிதர் மையத்தில் இருக்க வேண்டும்


செப்.02,2016. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியிலும், மனிதர் மையப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார், திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன்.

படைப்பைப் பாதுகாக்கும் உலக செப நாளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய செய்தியை, இவ்வியாழனன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிட்டுப் பேசியபோது இவ்வாறு கூறினார் கர்தினால் டர்க்சன்.

படைப்பிற்கெதிராக நாம் இழைத்த தீமைகளுக்கு உண்மையிலே நாம் மனம் வருந்த விரும்பினால், படைத்தவர், படைப்பு மற்றும் நம் சகோதர, சகோதரிகளுக்கு எதிராக நாம் செய்த பாவங்களை அறிக்கையிட வேண்டும் என்றார் கர்தினால் டர்க்சன்.

கத்தோலிக்கத் திருஅவையும், ஆர்த்தடாக்ஸ் திருஅவையும் சிறப்பித்த இந்த உலக செப நாளுக்கான திருத்தந்தையின் செய்தியை பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிட்டவர்களில் ஒருவரான ஆயர் Brian Farrell அவர்கள், இச்செப நாள் முக்கியமான கிறிஸ்தவ ஒன்றிப்பு கூறைக் கொண்டுள்ளது என்று கூறினார்.

மேலும், இப்பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிய The Guardian of Mercy என்ற நூலின் ஆசிரியர் Terence Ward அவர்கள், படைப்பைப் பாதுகாப்பதற்கு எவ்வாறு செயல்பட முடியும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும், செயல்கள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அவை நம் ஒவ்வொருவரிலிருந்தும் தொடங்க வேண்டும் என்றார். 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.