2016-09-02 16:35:00

படைப்பு பராமரிக்கப்பட, ஏழைகள் பாதுகாக்கப்பட செபம்


செப்.02,2016. இப்பூமியை அழித்து, ஏழைகளைத் துன்புறுத்தும் மனிதரின் தன்னலம் முடிவுக்கு வரவேண்டும் என்பதற்கு, கடவுளின் உதவியை இறைஞ்சிய மாலை திருவழிபாட்டை, தலைமையேற்று நடத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

படைப்பைப் பாதுகாக்கும் உலக செப நாளான இவ்வியாழன் மாலையில், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நடைபெற்ற மாலை திருப்புகழ்மாலையில், ஒவ்வொரு மனிதர் மற்றும் ஒவ்வொரு தலைமுறையின் நன்மைக்காக வழங்கப்பட்டுள்ள, இறைபராமரிப்பு எனும் கொடைகளைப் பாதுகாப்பதற்கு, ஞானத்தின் ஆவியை மக்கள் அனைவர்மீதும் பொழியுமாறு செபித்தார் திருத்தந்தை.

இறைவன், இப்பூமியின் ஏழ்மைநிலையைக் கருணையுடன் கண்ணோக்குமாறும், இதன் வழியாக, எந்த ஒரு மனிதரும் தங்களின் அன்றாட உணவு கிடைக்காமல் இருக்கமாட்டார்கள் என்றும் செபித்த திருத்தந்தை, ஆண்டவரே, தேவையில் இருக்கும் எம் சகோதர, சகோதரிகள் முன்பாக, எங்கள் பார்வையைக் குறைத்து, எம் இதயங்களைக் கடினப்படுத்தும் தன்னலத்தைத் தோற்கடிக்கவும் வரம்தாரும் எனவும் செபித்தார்.

கடவுள் படைப்பின் விந்தைகளைப் புகழும் திருப்பாடல்களுடன் நடைபெற்ற இத்திருவழிபாட்டில், கப்புச்சின் சபை அருள்பணி ரனியெரோ கந்தாலமெஸ்ஸா அவர்கள் மறையுரை வழங்கினார்.

மனிதர் எவ்வளவுக்குத் தன்னலமின்றி வாழ்கின்றாரோ, அந்த அளவிற்கு, அவர், பிறரின் தேவைகளை உணர்ந்தவராக இருப்பார் என்றும், உண்மையான மனிதராகவும், கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டவராகவும் செயல்படுவார் என்றும் உரைத்தார் அருள்பணி கந்தாலமெஸ்ஸா.

கத்தோலிக்கத் திருஅவையில், இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட படைப்பைப் பாதுகாக்கும் உலக செப நாளுக்கு, “நம் பொதுவான இல்லத்திற்கு இரக்கம் காட்டுவோம்” என்ற தலைப்பில் செய்தியும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.