2016-09-02 15:54:00

கொலம்பியா : ஒப்புரவாகுவோம், உறவுகளைக் கட்டியெழுப்புவோம்


செப்.02,2016. தென் அமெரிக்க நாடான கொலம்பியா முன்னோக்கிச் செல்வதற்கு உதவும், ஒப்புரவு மற்றும், உறவுகளைக் கட்டியெழுப்புதலை ஊக்குவிக்கும் விதமாக, "அமைதிக்கான வாரம்" என்ற ஒரு நிகழ்வு, வருகிற ஞாயிறன்று தொடங்குகிறது.

செப்டம்பர் 4ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள, கொலம்பிய தேசிய காரித்தாஸ் இயக்குனர் ஆயர் Héctor Fabio Henao Gaviria அவர்கள், அமைதியிலும், நல்லிணக்கத்திலும் நாட்டினர் வாழ்வதற்கும், நாட்டைத் தொடர்ந்து முன்னோக்கி நடத்திச் செல்வதற்கும் இது உதவும் என்றார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த 7வது தேசிய ஒப்புரவு மாநாட்டின் இறுதியில், “மன்னிப்பு, ஒப்புரவு மற்றும் அமைதியை ஊக்குவிப்பவர்கள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து சிந்திப்பதற்கு அந்நாட்டினர் அழைக்கப்படுவதாக ஆயர் தெரிவித்தார். இந்த மாநாட்டில், கொலம்பியாவின் 650 சமூகங்கள் கலந்துகொண்டன.    

இதற்கிடையே, கொலம்பிய இராணுவத்திற்கும், அந்நாட்டின் FARC புரட்சிக்குழுவுக்கும் இடையே ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்த சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இச்சண்டையில், இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.