2016-09-02 15:40:00

இலங்கையின் நிலைத்த வளர்ச்சியில் இளையோர்க்கு முக்கிய பங்கு


செப்.02,2016. இலங்கையில் அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதில் இளைய சமுதாயத்திற்கு முக்கிய பங்கு உள்ளது என்று, அந்நாட்டில், இளையோர் நிகழ்வு ஒன்றில் கூறினார், ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.

போரிடுவதற்கு இளையோர் அனுப்பப்படும்போது, அமைதியைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையிலிருந்து ஏன் அவர்கள் தடைசெய்யப்பட வேண்டும் என்ற கேள்வியையும் முன்வைத்தார் பான் கி மூன்.

அமைதியைக் கட்டியெழுப்புதல் மற்றும் ஒப்புரவை உருவாக்கும் நடவடிக்கைளிலிருந்து இளையோரை ஒதுக்குதல், கடும் அநீதிகளில் ஒன்று எனவும், 2030ம் ஆண்டின் வளர்ச்சித்திட்ட இலக்குகளைச் செயல்படுத்துவதில் இளையோர்க்கு முக்கிய பங்கு உள்ளது என்றும் கூறினார் பான் கி மூன்.

மேலும், ஆகஸ்ட் 31, இப்புதனன்று இலங்கைக்கு மேற்கொண்ட மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணத்தின்போது பேசிய பான் கீ மூன் அவர்கள், ஐ.நா. அமைப்பு, இலங்கையிடம் இருந்து பல பாடங்களைக் கற்றுக்கொண்டது எனக் கூறியதாக, ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

ருவாண்டா, இலங்கை, போஸ்னியா ஆகிய நாடுகளில் நடந்த போரின்போது, ஐ.நா.வின் தவறுதலால் பல மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியதாகச் சொல்லப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.