2016-09-02 16:18:00

அன்னை தெரேசா புனிதர்பட்ட நிகழ்வில் அவரின் உறவினர்


செப்.02,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற ஞாயிறன்று அன்னை தெரேசா அவர்களை, புனிதராக அறிவிக்கும் திருப்பலியில், அன்னை தெரேசா அவர்களின் உறவினர் ஒருவரும் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் சிசிலியில் வாழ்ந்துவரும் அன்னை தெரேசா அவர்களின் சகோதரர் மகளான, 70 வயது நிரம்பிய Agi Bojaxhiu அவர்கள், இத்திருப்பலியில் கலந்துகொள்ளவுள்ளார்.

இளவயதிலே இத்தாலியில் குடியேறிய Agi Bojaxhiu அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், அன்னை தெரேசா அவர்கள், இயல்பாகவே மிகவும் கடினமான வேலைகளைச் செய்பவர் என்றார்.

அன்னையவர்கள், மனிதரின் புண்களையும், காயங்களையும் தொட்டது, பிறருக்கு உதவியது, தொடர்ந்து வேலை செய்தது போன்றவற்றைப் பார்த்தபோது, அவை தனக்கு ஒரு பாடமாக அமைந்து, மிகுந்த திருப்தியைக் கொடுத்ததாகத் தெரிவித்தார் Agi.

மேலும், அன்னை தெரேசா அவர்கள் இறந்த கடந்த 19 ஆண்டுகளில், அவர் தொடங்கிய பிறரன்பு மறைப்பணியாளர் சபையினர், விசுவாசத்திலும், சேவையிலும் மட்டுமின்றி, உலகில், எண்ணிக்கையிலும் அதிகரித்து உள்ளனர் என்று கூறப்படுகிறது.

கல்கத்தாவில், 1950ம் ஆண்டில், 12 பேரைக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்சபையில், 1997ம் ஆண்டில், 3,914 அருள்சகோதரிகளும், 363 அருள்சகோதரர்களும் இருந்தனர். ஆனால், 2016ம் ஆண்டில், 5,161 அருள்சகோதரிகளும், 416 அருள்சகோதரர்களும் உள்ளனர். அன்னை இறந்த 1997ம் ஆண்டில், 120 நாடுகளில் பணியாற்றிய இச்சபையினர், தற்போது, 139 நாடுகளில், 758 இல்லங்களை நடத்துகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.