2016-09-01 15:39:00

இரக்கத்தின் காலம் - அன்பு செலுத்துவதன் அடிப்படைத் தேவைகள்


அருளாளர் அன்னை தெரேசா அவர்கள் உரைகளிலிருந்து... ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு சூழலில், வெவ்வேறு முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை ஏற்படுவது இயற்கை. வேற்றுமைகளையும் மீறி, நம் அனைவரையும் கட்டிப்போடும் சக்தி அன்புக்கு மட்டும்தான் உண்டு. நீங்கள் ஒருவருக்கொருவர் உரையாடும்போது, கருத்து வேறுபாடு எழலாம். வேறுபாடுகள் எழுவது எப்படி இயற்கையோ, அப்படியே அதைப் பேசித் தீர்த்துக்கொள்ள நேரம் இருக்க வேண்டியதும் இயற்கை. நம் குடும்பத்தினரால் நாம் காயப்படுத்தப்படும்போது, அதை மறப்பதற்கும், மன்னிப்பதற்கும் நாம் தயாராக இருப்போமேயானால் கடவுளின் அன்பை நாம் உணர முடியும். அன்பு செலுத்துவது எல்லா நேரங்களிலும் சாத்தியமான செயலல்ல... அதுவும் குடும்பத்தினரிடையே அன்பு எப்போதும் தொடரும் என்பது மிகவும் கஷ்டமான செயல்தான். ஆனாலும், இல்லத்தில் நாம் அன்பு செலுத்தி, நம் மீதும் அன்பு செலுத்தப்படுமானால், அந்த அன்பை, சுற்றி உள்ளவர்கள் மீது நாம் செலுத்த ஏதுவான சூழல் உருவாகும். நம்மைக் காயப்படுத்துபவர்களை மன்னிப்பதும், நம்மை ஏமாற்றுபவர்களை மறப்பதும், நமக்கு துரோகம் இழைப்பவர்களைத் திருத்த முயற்சிப்பதும் அன்பு செலுத்துவதன் அடிப்படைத் தேவைகள் என்பதை நாம் புரிந்துகொண்டால் எங்கும் அன்பு நிறைந்து அமைதி பெருகி வாழ்க்கை வளமடையும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.