2016-09-01 16:03:00

அன்னை தெரேசா முற்றிலுமாக ஓர் இந்தியப் புனிதர்


செப்.01,2016. அன்னை தெரேசா அவர்களின் புனிதர்பட்ட நிகழ்வு, இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான நிகழ்வு என்றும், இந்நிகழ்வுக்கு இந்திய அரசு ஆதரவு வழங்குவது மகிழ்ச்சி தருகின்றது என்றும், இந்திய கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

வத்திக்கானில், வருகிற ஞாயிறன்று நடைபெறும் இந்நிகழ்வு, உலகுக்கு, குறிப்பாக, இந்தியர்களுக்கு, ஒரு முக்கியமான நாள் என்றும், அல்பேனியாவிலிருந்து இந்தியா வந்து, இனம், மதம், மொழி ஆகியவற்றைக் கடந்து, ஒதுக்குப்புறங்களில் வாழும் இலட்சக்கணக்கான மக்களுக்கு நற்செய்தியின் விழுமியங்களை அன்னை விதைத்தார் என்றும், அன்னை தெரேசா முற்றிலுமாக ஓர் இந்தியப் புனிதர் என்றும் இந்திய ஆயர் பேரவைச் செயலர் ஆயர் தெயதோர் மஸ்கரெனாஸ் அவர்கள் கூறினார்.

அன்னை தெரேசா, நம் புனிதர் என, பெரும்பாலான இந்தியர்கள் நினைக்கின்றனர் என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியுள்ளார் என்றும் உரைத்த ஆயர் மஸ்கரெனாஸ் அவர்கள், அன்னையின் ஏழ்மை மற்றும் தாழ்மையால், இந்தியர்கள் செல்வந்தர்களானோம் என்றும் தெரிவித்தார்.

மேலும், டெல்லி பேராயர் அனில் கூட்டோ அவர்கள் கூறுகையில், அன்னை தெரேசாவுக்குப் புனிதர் பட்டத்தை இறைவனே வழங்குகிறார், திருஅவை மற்றும் இறைமக்கள் சார்பாக, திருத்தந்தை இதை நடத்துகிறார் என்றார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.