2016-08-31 16:05:00

சமூக அமைப்புகள் மக்களின் தேவைகளுக்கு பணியாற்ற அழைப்பு


ஆக.31,2016. ஒவ்வொரு மனிதரும் மதிக்கப்படுவதை அதிகமாக வலியுறுத்தும் மனித உறவுகளின் மாண்பு குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்குமாறு, ஹாலந்து நாட்டில், கிறிஸ்தவ சமூக மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஹாலந்து நாட்டின் Doorn நகரில் இப்புதனன்று ஆரம்பித்துள்ள, டச்சு கிறிஸ்தவ சமூக மாநாட்டிற்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, தாராளமயமாக்கப்பட்ட உலகில், மனிதருக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து, இம்மாநாட்டினர் சிந்திப்பது குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

ஏழைகள், ஒதுக்கப்பட்டவர் ஆகியோர்க்கு முன்னுரிமை கொடுக்குமாறும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, இவ்வாறு செயல்படுவதன் வழியாக, ஒவ்வொரு பொருளாதார, அரசியல் மற்றும் சமூக அமைப்புகள், அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்கும், அவர்களின் தேவைகளுக்கும் பணியாற்றும் என்று கூறியுள்ளார்.

இதன் வழியாக, படைப்பின் பாதுகாவலராக, மனித சமுதாயத்திடம் கடவுள் ஒப்படைத்துள்ள பணியைத் திறம்படவும் ஆற்ற இயலும் என்றும் உரைத்துள்ள திருத்தந்தை, இம்மாநாட்டில் பங்குகொள்ளும் அனைவருக்கும் தனது வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.

திருத்தந்தையின் இச்செய்தியை, திருத்தந்தையின் பெயரில் அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.