2016-08-31 15:51:00

ஐரோப்பிய இதயயியல் உச்சி மாநாட்டில் திருத்தந்தை உரை


ஆக.31,2016. அறிவியலாளர் தங்களின் ஆய்வில், ஒருபோதும் சமநிலை காப்பதில்லை, ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட வரலாற்றையும், இருப்பையும், சிந்தனைப்போக்கையும் கொண்டுள்ளனர் என்பதால்,  ஒவ்வோர் அறிவியலாளருக்கும் தூய்மைப்படுத்துதல் தேவைப்படுகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இந்தத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை வழியாக, மனதின் உண்மை மற்றும் உறுதியான தன்மையை கெடுக்கும் நஞ்சுகள் அகற்றப்படும் என்றும், பொருள்களின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவும் இது உதவும் என்றும் கூறினார் திருத்தந்தை.

உரோம் நகரில் இப்புதனன்று நிறைவடைந்த, ஐரோப்பிய இதயயியல் கழகத்தின் மாபெரும் மாநாட்டில், இப்புதனன்று உரையாற்றிய திருத்தந்தை, மனித உடலின் ஒவ்வொரு துடிப்பும், இந்த மருத்துவர்களின் கைகளில் உள்ளது என்றும் கூறினார்.

மனித வாழ்வு மற்றும் மனித நலம் பற்றிய அறிவியல் ஆய்வுகளின் முக்கியத்துவத்தை, திருஅவையின் அதிகாரப்பூர்வ போதன எப்போதும் வலியுறுத்துகின்றது என்றும், அறிவியலாளரின் இந்தச் சவால்நிறைந்த பாதையில் திருஅவை உடன் இருப்பது மட்டுமல்லாமல், அவர்களை ஊக்குவித்து ஆதரவளிக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிதரின் துன்பங்களை அகற்றி, வாழ்வின் தரத்தை முன்னேற்றவும், நம்பிக்கையுணர்வை அதிகரிக்கவும் உதவும் இந்த அறிவியல் ஆய்வாளர்களுக்குத் தனது ஆசீரை அளிப்பதாகவும் கூறி, தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த ஐரோப்பிய கழகத்தின் தலைவர் ஃபவுஸ்தோ பின்ட்டோ அவர்கள், திருத்தந்தைக்கு, இதய வடிவத்தால் அமைக்கப்பட்ட சிலுவை, Stethoscope போன்றவற்றை பரிசாக அளித்தார்.

இதயம் தொடர்புடைய மருந்துகள் குறித்த, இந்த மாபெரும் அறிவியல் உச்சி மாநாட்டில், 120க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட நலவாழ்வுத் துறையினர் கலந்துகொண்டனர். ஐந்து நாள் நடைபெற்ற இம்மாநாட்டில், ஆறாயிரத்திற்கு மேற்பட்ட இதய நோய் தொடர்புடைய அண்மை கண்டுபிடிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் இறுதி வாரத்தில், இந்த மாநாடு நடைபெறுகின்றது.  

உலக நலவாழ்வு நிறுவனத்தின் கணிப்புப்படி, ஆண்டுதோறும், ஒரு கோடியே 70 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள், இதயம் தொடர்புடைய நோயால் இறக்கின்றனர். அதாவது உலகில் இடம்பெறும் இறப்புகளில், 31 விழுக்காடு இதயம் தொடர்புடையதாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.