2016-08-31 15:56:00

அரபு கிறிஸ்தவர்களின் விசுவாசம் தொடர்ந்து சுடர்விடுவதாக


ஆக.31,2016. துன்ப சோதனை இருளின் மத்தியிலும், தங்களின் விசுவாசத்தைத் தொடர்ந்து ஒளிரச்செய்யுமாறு, அரபு மொழி பேசும் கிறிஸ்தவர்கள் அனைவரையும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இப்புதனன்று நடைபெற்ற பொது மறைக்கல்வியுரையில் கலந்துகொண்ட ஈராக், ஜோர்டன் மற்றும் மத்திய கிழக்குப் பகுதி அரபு மொழி பேசும் கிறிஸ்தவர்களிடம் இவ்வாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இரத்தப்போக்குடைய பெண் ஒருவருக்கு இயேசு குணமளித்த நிகழ்வு(மத்.9:20-22) பற்றி விளக்கிய திருத்தந்தை, மனித நம்பிக்கை மறையும்போது, எல்லாமே இயலாததாகத் தெரியும்போது, விண்ணகக் கதிரவன் உதித்து, மீண்டும் நம்பிக்கையைத் தருகின்றது என்றும் கூறினார்.  

சோதனைகளான இருளின் மத்தியிலும், தங்களின் விசுவாசத்தைத் தொடர்ந்து ஒளிரச்செய்யுமாறு அக்கிறிஸ்தவர்களிடம் கூறிய திருத்தந்தை, இம்மக்கள், எல்லாத் தீமைகளிலிருந்தும் காப்பாற்றப்படுவதற்கு ஆண்டவர் ஆசி வழங்குகிறார் என்றும் கூறினார்.

மேலும், “உதவி தேவைப்படும் மக்களுக்கு, அன்போடும், கனிவோடும்   சேவையாற்றுவது, மனிதாபிமானத்தில் வளர்வதற்கு நமக்கு உதவும்” என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டரில், இப்புதனன்று வெளியாயின.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.